மகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்!

Share this News:

மும்பை (07 நவ 2019): மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்துள்ள நிலையில் சிவசேனா கட்சி தங்கள் எம்எல்ஏக்கள் கட்சித் தாவலை தடுக்க அவர்களை நட்சத்திர ஓட்டலுக்கு மாற்றியுள்ளது.

மும்பையில் இன்று காலை மராட்டிய ஆளுநர் கோசியாரியை சந்தித்து பேச பாஜக தலைவர்கள் திட்டமிட்டிருந்தனர். எனினும், உத்தவ் தாக்கரே தலைமையில் இன்று நடைபெற்ற சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு காத்திருக்கும் வகையில் இந்த சந்திப்பை மதியத்துக்கு பாஜக தலைவர்கள் ஒத்திவைத்திருந்தனர். ஆனால் சிவசேனா தரப்பிடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆளுநர் கோசியாரியை பாஜக மூத்த தலைவர்கள் கிரிஷ் மகாஜன், சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முன்கன்டிவார், ஆசிஷ் சேலார் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாட்டீல், மாநில அரசியல் நிலவரம் குறித்து ஆளுநருடன் ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

இதனிடையே, பாஜகவுக்கு சிவசேனா எம்எல்ஏக்கள் அணி தாவுவதை தடுக்கும் வகையில், உத்தவ் தாக்கரேயுடனான ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அடுத்த 2 நாள்களுக்கு அங்கு தங்கியிருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தங்களது கட்சிக்கு முதலமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என்றார்.

அமைச்சரவை இலாகாக்கள் பகிர்வு போன்ற விவகாரத்தில் சிவசேனாவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


Share this News:

Leave a Reply