டொனால்ட் ட்ரம்பின் குஜராத் நிகழ்ச்சிகள் ரத்து!

Share this News:

புதுடெல்லி (20 பிப் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வரும் நிலையில் தாஜ்மகாலை பார்க்க விரும்புவதால் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டிரம்ப் 2 நாள் பயணமாக வருகிற திங்கட்கிழமை (24-ந்தேதி) இந்தியா வருகிறார். “ஏர்வோர்ஸ்” சிறப்பு விமானம் திங்கட்கிழமை மதியம் 11.55 மணிக்கு ஆமதாபாத் வந்து சேரும். ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து அவர் நேரடியாக மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்துக்கு செல்கிறார்.

குஜராத் பயணத்தின் போது மோதிரா கிரிக்கெட் ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியம் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் என்ற சிறப்பு பெற்றதாகும்.

ஆனால் தற்போது இந்த கிரிக்கெட் ஸ்டேடியத்தின் திறப்பு விழா ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே வருகிற 24-ந்தேதி இந்த ஸ்டேடியத்தை டிரம்ப் திறந்து வைக்க மாட்டார். அதே போல் குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்திற்கும் டிரம்ப் செல்ல திட்டமிட்டிருந்தது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் தாஜ்மகால் விசிட் அடிக்க ட்ரம்ப் விரும்புவதே காரணம். உலகப்புகழ் பெற்ற காதல் சின்னமான ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை சூரியன் மறையும் நேரத்தில் பார்த்தால் மிக சிறப்பாக இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு குஜராத் நிகழ்ச்சிகளை ஓரிரு மணி நேரத்துக்குள் முடித்து விட்டு டிரம்ப் ஆக்ரா புறப்பட்டு செல்வார் என்று தெரிய வந்துள்ளது. அங்கு தாஜ்மகால் முழுவதையும் அவர் சுற்றி பார்க்க உள்ளார். இதையடுத்து தாஜ்மகால் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஆக்ரா விசிட்டுக்குப் பிறகு அன்று இரவு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் டிரம்ப்பும் அவரது மனைவியும் தங்குகிறார்கள். டிரம்ப்புடன் அமெரிக்காவில் இருந்து உயர்மட்ட குழுவும் வருகிறது. அவர்களும் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்கள்.

மறுநாள் (25-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடியும், ஜனாதிபதி டிரம்ப்பும் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவு இடத்துக்கு செல்கிறார்கள். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் டிரம்ப் மலர் தூவி மரியாதை செலுத்துவார்.

இந்தியாவில் டிரம்ப் சுமார் 36 மணி நேரமே இருப்பார் என்று தெரிய வந்துள்ளது. ஆமதாபாத், ஆக்ரா, டெல்லி ஆகிய 3 நகரங்கள் தவிர அவர் வேறெங்கும் செல்லவில்லை. வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

எனவே செவ்வாய்க்கிழமை டிரம்ப்புக்கு மோடி மதிய உணவு விருந்து அளிப்பதுடன் டிரம்ப் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share this News:

Leave a Reply