இந்திய பட்ஜெட்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வரி – அதிர்ச்சி தகவல்!

Share this News:

புதுடெல்லி (02 பிப் 2020): வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் இந்திய பட்ஜெட்டில் வரி விதிப்பு முறை மாற்றி அமைக்கப் பட்டுள்ளது.

2020-21 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அப்போது தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. இதுகுறித்து நிருபர்களிடம் தெரிவித்த வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே., “வெளிநாடு வாழ் இந்தியர்களும் வரி செலுத்தும் வகையில் வரி செலுத்தும் முறையில் மாற்றங்கள் கொண்டு வந்துள்ளோம். இதுவரை, வருடத்தில் 182 நாட்களுக்கும் மேலாக வெளிநாட்டில் இருந்தால் அவர் வெளிநாடுவாழ் இந்தியர் என்று கருதப்படுவார். இனிமேல் வருடத்தில் குறைந்தபட்சம் 240 நாட்களாவது வெளிநாட்டில் இருந்தால்தான் அவர் இந்தியர் இல்லை என்று கருதப்படுவார்.” என்று தெரிவித்தார்.

அதாவது, வருடத்தில் 120 நாட்களுக்கும் மேலாக வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் தாயகத்தில் தங்கிவிட்டால் அவரும் வருமானவரி பிரிவின் கீழ் வந்து விடுவார்.

பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள இந்த மாற்றம் தொடர்பாக “இது ஒரு மோசமான முன்னுதாரணம்!” என்று பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் அவர்கள் பணியாற்றக்கூடிய நாட்டில் மிகக் குறைந்த அளவுக்கான வருமான வரி செலுத்துகிறார்கள். சில நாடுகளில் அதுவும் கிடையாது. இந்த கடுமையான விதிமூலம், அவர்களும் இனி வருமான வரி செலுத்தக் கூடிய நிலைமை உருவாகிவிட்டது!” என்றனர்.


Share this News:

Leave a Reply