பெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொரு அதிர்ச்சி!

Share this News:

ஐதராபாத் (30 நவ 2019): தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் எரித்துப் படுகொலை செய்யப் பட்ட நிலையில் இன்னொரு பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எரிந்த நிலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (27) உடல் கண்டெடுக்கப்பட்டார். இவர் வன்புணர்ந்து படுகொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கோரச் சம்பவத்தின் தாக்கம் மறைவதற்குள் அடுத்த நாளே மற்றொரு பெண்ணின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் சித்துலகட்டா எனுமிடத்தில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந்த 4 இளைஞர்கள், அருகிலுள்ள பகுதியில் இருந்து கறும்புகை வருவதைக் கண்டனர். மேலும் துர்நாற்றமும் வீசியுள்ளது.

இதையடுத்து அங்கு சென்றபோது, மனித உடல் எரிந்துகொண்டிருப்பதைக் கண்டு தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், அங்கு விரைந்த போலீஸார், தீயை அணைத்து சோதனை செய்த போது அடையாளம் தெரியாத பெண் உடல் என்பதை உறுதிபடுத்தினர்.

அந்த பெண்ணுக்கு சுமார் 35 முதல் 40 வயது வரை இருக்கலாம். அந்த பெண் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஓஸ்மானியா அரசு மருத்துவமனையில் அந்த பெண் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது. என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply