பதான் படத்தை வெளியிட உலமா வாரியம் எதிர்ப்பு – ஷாருக்கான் படத்துக்கு மேலும் நெருக்கடி!

Share this News:

போபால் (17 டிச 2022): ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ படத்துக்கு மத்திய பிரதேச உலமா வாரியமும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதுகுறித்து மத்திய பிரதேச உலமா வாரிய தலைவர் சையது அனஸ் அலி கூறுகையில் “இந்தப் படம் முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை மத்தியப் பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் வெளியிட அனுமதிக்க மாட்டோம்.

பதான்கள் மிகவும் மதிக்கப்படும் முஸ்லிம் சமூகங்களில் ஒன்று. இத்திரைப்படத்தில் பதான்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இழிவுபடுத்தப்பட்டுள்ளது. படத்திற்கு பதான் என்று பெயரிடப்பட்டுள்ளது,

இந்த படத்தில் பெண்கள் அசிங்கமான நடனம் ஆடுவார்கள். படத்தில் பதான்கள் தவறாக சித்தரிக்கப்படுகிறார்கள். தயாரிப்பாளர்கள் பதான் என்ற பெயரை நீக்க வேண்டும், ஷாருக்கான் தனது கதாபாத்திரத்தின் பெயரை மாற்ற வேண்டும், அதன் பிறகு நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்” என்று மத்திய பிரதேச உலமா வாரிய தலைவர் சையது அனஸ் அலி ANI இடம் கூறினார்.

படத்திற்கு எதிராக சட்டரீதியாக போராடுவேன் என்று சையது அனஸ் அலி தெரிவித்துள்ளார். தணிக்கை வாரியத்தை அணுகி படத்தின் வெளியீட்டை தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்றும் அலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, படத்தில் இடம்பெற்ற ‘பேஷரம் ரங்’ பாடலுக்கு மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

அந்த பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருந்த பிகினி காவி நிறத்தில் இருந்ததை சுட்டிக்காட்டி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார் நரோட்டம் மிஸ்ரா. படக்குழுவினர் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் நரோட்டம் மிஸ்ரா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் பேனரில் ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply