கத்தார்-பஹ்ரைன் இணைக்கும் பாலம் கட்டும் பணி துவக்கம்!

Share this News:

மனாமா, பஹ்ரைன் (18 நவம்பர் 2023):  பஹ்ரைன் நாட்டின் இளவரசரும், பிரதமருமான எச் ஆர் எச் இளவரசர் சல்மான் பின் ஹமத் அல் கலீஃபாவும், கத்தார் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஷேக் முஹம்மது பின் அப்துர் ரஹ்மானும் இன்று பஹ்ரைனில் சந்தித்துக் கொண்டனர்.

அதிகாரப் பூர்வமாக நடந்த இச் சந்திப்பில், கத்தார் மற்றும் பஹ்ரைனுக்கு இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி கலந்துரையாடப் பட்டது.

இந்த சந்திப்பில் கத்தார்-பஹ்ரைன் பாலம் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.

சந்திப்பின் முடிவில் இரு நாடுகளிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திட்டங்களைத் துரிதமாக முடித்து, உடனடியாகப் பாலம் கட்டுவதைச் செயல்படுத்தத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், பாலஸ்தீன் – இஸ்ரேல் போர் சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பற்றி விவாதித்தனர். காஸா-வில் போரை உடனடியாக நிறுத்தி பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியதன் நடவடிக்கை பற்றி இரு தரப்பினரும் வலியுறுத்தினர். (இந்நேரம்.காம்)

பதட்டமான வளைகுடா சூழலில், கத்தார்-பஹ்ரைன் இடையே கட்டப்படும் இப்பாலம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் வளைகுடா ஒத்துழைப்பு சபையில் (Gulf Cooperation Council) உள்ள ஆறு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த சுற்றுலா விசாவுக்கு ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: