இஸ்ரேலிடம் பேசிப் பயனில்லை; இனி அதிரடி நடவடிக்கை! – கத்தார் மன்னர் அறிவிப்பு

Share this News:

ரியாத் – சவூதி அரேபியா (12 நவம்பர் 2023): ரியாத்தில் உள்ள தேசிய மாநாட்டு மையத்தில் கூட்டு அரபு-இஸ்லாமிய அசாதாரண உச்சி மாநாடு (Joint Arab-Islamic Extraordinary Summit) நேற்று நடைபெற்றது.

இந்த அவசர கால உச்சிமாநாட்டில் அனைத்து அரபு நாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கத்தார் நாட்டின் மன்னரான ஷேக் தமீம் பின் ஹாமத் அல்-தானி ஆற்றிய உரை, போர்க்காலச் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கத்தாரின் மன்னர் ஷேக் தமீம் அவர்களின் உரையிலிருந்து:

“வரலாற்றில் மிக முக்கியமான தருணம் இது. மிக இக்கட்டான சூழலில் இந்த உச்சிமாநாடு கூட்டப் பட்டுள்ளது.

மனிதனால் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமான போர்க் குற்றங்களை இஸ்ரேல், காஸா பகுதியில் நம் பாலஸ்தீன சகோதரர்கள் மீது தினம் தினம் இழைத்து வருகிறது.

இத்தகைய போர்க்குற்றங்களைக் கண்ணால் கண்டபின்பும், படுகொலைகளை பார்த்த பின்பும் தினம் தொடரும் போர் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்த எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் சர்வதேச சமூகம் தவறி விட்டது.

கொத்துக் கொத்தாக குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் பெருமளவில் கொல்லப்படும் காட்சிகளைக் கண்டு எங்கள் இதயங்கள் வலியால் விம்மித் துடிக்கின்றன.

சர்வதேச சட்டங்களை, போர் நெறிகளை ஒட்டு மொத்தமாகத் தூக்கி எறிந்துவிட்டு, இஸ்ரேல் சர்வ சாதாரணமாக இனப்படுகொலையை நிகழ்த்துகிறது. இதைக் கண்ட பிறகும் ஏதும் நடக்காதது அமைதி காக்கும் சர்வதேச சமூகத்தின் நிலை கண்டு வியப்பு மேலிடுகிறது.

குண்டு வீச்சில் சிக்கி ஏற்கனவே உயிருக்குப் போராடும் நூற்றுக் கணக்கானோர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகள் மீது மீண்டும் குண்டு வீசி படுகொலை செய்வது என்ன மாதிரியான போர் விதிமுறைகள்?

மருத்துவமனைகளின் கீழே போராளிகள் பதுங்கு குழிக்குள் உள்ளனர் என்ற இஸ்ரேலின் குற்றச்சாட்டும் பொய் என சமீபத்தில் தெளிவாக நிரூபணம் ஆன பின்னரும் குண்டுகள் ஓயவில்லை.

போரை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச அளவில் பெரும் கண்டங்கள் ஒலித்தபின்னரும் இஸ்ரேல் தன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. (இந்நேரம்.காம் தமிழில் வழங்கிய செய்தி: https://www.inneram.com/world/investigation-disproves-israel-claim-of-hamas-tunnel-under-gaza-hospital/) (இந்நேரம்.காம்)

பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தப்பட்டு சுமூகமான நிலை வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் எவ்வளவு முயற்சி செய்தும் இஸ்ரேல் தன் இனப்படுகொலைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை.

இஸ்ரேல் நிகழ்த்தும் போர்க்குற்றங்கள் பற்றி இனி வெறும் வார்த்தைகளால் பேசி எந்தப் பயனும் இல்லை; அதிரடி நடவடிக்கை ஒன்றே வழி!”

– இவ்வாறு கத்தார் மன்னர் ஷேக் தமீம் பேசியுள்ளார். இது, அரபுலகில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த உரையாக கருதப்படுகிறது.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

 


Share this News: