தனி ஒருத்தியாக கேரளா-கத்தார் ஜீப் பயணத்தில் அசத்திய நாஜிரா!

Share this News:

கத்தார் (07-12-2022): கால்பந்து விளையாட்டின் மீதும் பயணங்களின் மீதும் அளவுகடந்த காதல். இதை வைத்து தனியொரு பெண்ணால் என்ன செய்ய முடியும்?

கேரளா-வின் கண்ணூர் நகரத்தில் இருந்து தோஹா-கத்தாருக்கு மஹிந்த்ரா ஜீப்பில் தனியாளாக பயணித்து கத்தார் வந்திருக்கிறார்.

இவர் நாஜிரா நவ்ஷாத் என்ற இளம்பெண். திருமணமாகி கணவர் குழந்தைகளோடு வசித்தாலும், தனிமைப் பயணத்தில் மிகவும் நாட்டமுடையவர்.

சிறுவயது முதல் அர்ஜென்டினாவின் தீவிர ரசிகையான இவர், கத்தாரில் நடைபெறும் FIFA World Cup 2022 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் மெஸ்ஸியை நேரில் காண விரும்பியுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி கேரள எல்லையில் இருந்து துவங்கிய இவரது பயணம், ஓமான், துபாய், சவூதி எல்லைகளைக் கடந்து தோஹா சென்று முடிந்திருக்கிறது. (இந்நேரம்.காம்)

நாஜிரா (இந்நேரம்.காம்)

தினசரி 600 கிலோ மீட்டர்கள் வரை பயணித்து, ஆங்காங்கே வாகனத்திலேயே முகாமிட்டு, உணவு சமைத்து சாப்பிட்டு உறங்கியிருக்கிறார்.

வெளியில் எங்கும் சாப்பிடத் தேவையில்லாத அளவிற்கு வாகனத்திலேயே அனைத்து பொருட்களையும் வைத்திருக்கிறார்.

ஏற்கனவே பயணங்கள் மூலம் மக்களுக்கு பரிச்சயமான யூட்யூபரான நாஜிராவின் பயணத்திற்கான செலவுகளை இவரது வாசகர்களே அளித்துள்ளனர்.

இவரது ஆர்வத்தைக் கண்ட, கத்தார் அரசின் QNB Group, அர்ஜென்டினா போட்டிகளைக் காண இலவச டிக்கட்டுகளை அளித்ததோடு மட்டுமின்றி, சிறப்பு விருந்தினர் என்ற அந்தஸ்த்தில் ‘பிட்ச்’ இல் இருந்தவாறே மேட்ச்சை காணும் வகையில் நாஜிராவிற்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது.

– இந்நேரம்.காம், கத்தார் செய்திப் பிரிவு.


Share this News:

Leave a Reply