பிரமிக்க வைக்கும் கல்ஃப் ரயில்வே – முழுமையான தகவல்கள்!

Share this News:

தோஹா (05 டிசம்பர் 2023): வளைகுடா நாடுகளுக்கான Gulf Co-operation Council இன் 44வது அமர்வு இன்று தோஹாவில் நடைபெறுகிறது. இந்த அமர்வில், வளைகுடா நாடுகளை வலுப்படுத்தும் திட்டங்கள் அலசப்படுகின்றன.

வளைகுடா நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒருங்கிணைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகின்றன.

இந்த ஒப்பந்தங்களில் முக்கியமாகக் கருதப்படுவது, வளைகுடா-வின் ஆறு நாடுகளை ஒன்றிணைக்கும் அதிவேக ரயில்வே திட்டமாகும். இதற்கு கல்ஃப் ரயில்வே (Gulf Railway) எனப் பெயரிடப் பட்டுள்ளது.

அதிவேக ரயில் திட்டம் – யாருக்கு பலன்?

இந்த திட்டம் மூலம் வளைகுடாவின் அனைத்து நாடுகளும் ஒரே சமயத்தில் பொருளாதார, புரிந்துணர்வு, ஒற்றுமை மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக ரயில்களில், மிகக் குறைந்த செலவில் பயணிகள் பிற நாடுகளுக்கு பயணிப்பதால் நேரம் மிச்சமாவதுடன், சரக்கு போக்குவரத்தின் மூலம் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மேம்பாடு அடையும்.

இந்த திட்டத்திற்கான பட்ஜெட், ரயில் பாதைக்கான நிலங்களை பகிர்ந்தளித்தல், ரயில் போக்குவரத்தை கட்டுப்படுத்துதல், சர்வதேச தரைவழி விதிகளை முறைப்படுத்துதல் ஆகியவற்றிற்கான ஆவணங்கள் இன்று கையெழுத்தாகின்றன.

அதிவேக ரயில்பாதை கட்டுமான விபரங்கள்:

முதல் இணைப்பாக, கத்தர் மற்றும் சவூதி நாடுகளுக்கு இடையேயான ரயில் பாதை அமைகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள SYSTRA என்ற பிரான்ஸ் நிறுவனத்திற்கு டெண்டர் அளிக்கப் பட்டுள்ளது. (இந்நேரம்.காம்)

  • முதலாவதாக 550 கி.மீ நீளமுள்ள அதிவேக ரயில் இணைப்பு தோஹா மற்றும் ரியாத் நகரங்களுக்கிடையே அமைகிறது.
  • இதன் தொடர்ச்சியாக, ஓமன் நாட்டின் Duqm நகரத்திற்கும் சவூதியின் ரியாத்-நகரத்திற்கும் இடையே ரயில் பாதை அமையவுள்ளது.
  • இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஓமன் நாட்டிற்கும் இடையே ரயில் பாதை அமைகிறது. Oman-Etihad Rail company எனும் நிறுவனம் இதற்காக 303 கி.மீ நீளமுள்ள ரயில் பாதையை அமைக்கிறது.
  • அதே நேரத்தில், சவூதியின் ரியாத் நகரத்துடன் குவைத் மற்றும் பஹ்ரைன் நாட்டை இணைக்கும் King Hamad Causeway project தொடங்குகிறது.

ரயில் பயணம் துவக்கம்:

இதன்மூலம், வளைகுடா நாடுகளை இணைக்கும் ரயில்கள் எதிர்வரும் டிசம்பர் 2030 இல் முழுமையான செயல்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

– நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)


Share this News: