விசா மோசடி தொடர்பாக கத்தாரில் கைது!

கத்தார் விசா மோசடியில் கைது!
Share this News:

தோஹா, கத்தார் (14 ஜனவரி 2024): போலி நிறுவனங்களின் பெயரில் விசா மோசடி-யில் ஈடுபட்ட நபரை கத்தார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கத்தார் நாட்டில் சட்டப்பூர்வமான வழிகளைத் தவிர்த்து பிற வழிகளில் விசா பெறுவது சட்டவிரோதச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. (இந்நேரம்.காம்)

“ஆசாத் விசா” என்ற பெயரில், போலி நிறுவனங்களின் பெயரில் பல்வேறு நபர்கள் விசா மோசடி-யில் ஈடுபட்டு வருவது தொடர்பாக கத்தார் காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன.

விசாவை விண்ணப்பிக்கும் நிறுவனத்திற்கும், விசாவைப் பெறுவருக்கும் தொடர்பு ஏதுமின்றி இடைத் தரகர்கள் மூலம் கூடுதல் பணம் பெற்றுக் கொண்டு அளிக்கப்படும் விசாவிற்கு ஆசாத் (சுதந்திரமான) விசா என்று பெயர்.

அதாவது ஆசாத் விசா மூலம் கத்தார் நாட்டிற்கு வருபவருக்கு விசா அளித்த நிறுவனத்தில் எந்த பணியும் இருக்காது. சம்பளம், தங்குமிடம், உணவு போன்ற எதுவும் தரப்படாது. இடைத் தரகர்களுக்கு பணம் தந்து பெற்ற விசாவில் கத்தாருக்கு வருபவர், தாமாக தேடி ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலையில் இணைந்து கொள்ள வேண்டும். கத்தார் நாட்டு விதிகளின்படி இது சட்ட விரோதம் ஆகும்.

புகார் தொடர்பான விசாரணையை மேற்கொண்ட கத்தார் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி), பணத்தைப் பெற்றுக் கொண்டு விசா வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஆசிய நாட்டவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​கைது செய்யப்பட்ட நபர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இந்த பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

போலி நிறுவனங்களுடனான விசா பரிவர்த்தனைகளைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கத்தார் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய விசா மோசடிகள் தொடர்பான புகார்களை Metrash2 செயலி மூலம் அளிக்கலாம் என்றும் கத்தார் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அறிவித்துள்ளது.

  • நமது செய்தியாளர் (இந்நேரம்.காம்)

Share this News: