ஈரான் விமான விபத்து – உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

Share this News:

தெஹ்ரான் (10 ஜன 2020): ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் மேற்கொண்ட 176 பேரும் உயிரிழந்தனர்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் விமானம் விழுந்து நொறுங்கி உள்ளதால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உக்ரைன் விமானம் புறப்படுவதற்குச் சற்று முன்பு, ஈரான் தனது ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள அமெரிக்க படை தளங்கள் மீது வீசி தாக்குதலை நடத்தியது. இதனால் உக்ரைன் விமானம் ஏவுகணைத் தாக்குதலில் சிக்கி இருக்கலாம் என்றும் அல்லது நாசவேலைத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என்றும் பல்வேறு யூகங்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விமான விபத்து குறித்து எந்த வியூகங்களையும் தெரிவிக்க வேண்டாம் என்று உக்ரைன் நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “விமான விபத்து பற்றி யூகங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்! விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது!” என்றார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் ஈரானியர்கள் 82 பேரும், கனடாவைச் சேர்ந்த 63 பேரும், உக்ரைனைச் சேர்ந்த 11 பேரும், சுவீடனைச் சேர்ந்த 10 பேரும், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 4 பேரும், ஜெர்மனி, இங்கிலாந்தைச் சேர்ந்த தலா 3 பேரும் உயிரிழந்தனர். இதில் 15 சிறுவர்கள் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply