உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது!

Share this News:

ரோம் (20 மார்ச் 2020): கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை உலக அளவில் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகத்தின் பல நாடுகளை தாக்கி, உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை190 ஐ எட்டியுள்ளது.. சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் உள்ள அந்தந்த நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 10,035 ஆக உயர்ந்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் சுமார் 41 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 3400 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த ஒரு நாளில் புதிதாக யாருக்கும் கொரோனா பரவாத நிலையில், அங்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3245 ஆக உள்ளது. உயிர் பலி எண்ணிக்கை, சீனாவை காட்டிலும் இத்தாலியில் அதிகரித்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும், அமெரிக்காவில் மிக வேகமாக பரவிவருவதால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இவர்களில் சுமார் 4500 பேர் அண்மையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள். பலி எண்ணிக்கை 200 ஐ கடந்துள்ளது. பிரான்சில் சுமார் 11,000 பேர் கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 370 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், ஈரானில் 1,284 பேரும், ஸ்பெயினில் 831 பேரும், இந்தியாவில் 5 பேரும் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கொரோனாவால் உயிர் பலிகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மருந்து கண்டுபிடிப்பிலும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.


Share this News:

Leave a Reply