ஆளுநர் உரை கிழிக்கிற உரைதான் – கொந்தளித்த ஜெ.அன்பழகன்!

Share this News:

சென்னை (07 ஜன 2020): சட்டமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் கலந்துகொள்ள தடை விதித்திருக்கிறார் சபாநாயகர் தனபால்.

இதுதொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. அன்பழகன்,” சட்டமன்றத்தில் இன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் திமுக சார்பில் நான் கலந்து கொண்டேன். நான் பேசும்போது திட்டமிட்டு என்னை பேசவிடாமல் அமைச்சர் பெருமக்கள், சபாநாயகர் அத்துனை பேரும் குறுக்கீடு செய்தனர். நான் பேசக்கூடாது எனது கருத்து இந்த அவையிலே இடம்பெறக்கூடாது என்பதில் அனைவரும் அக்கறையோடு இருந்தார்கள்.

உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் பேசும்போது, நன்றாக நடந்தது என்று பேசினார். நான் அதற்கு பதில் அளித்து பேசுகிறபோது, முறைகேடுகளை பட்டியலிட்டு பேசினேன். இதையடுத்து என்னை பேசவிடாமல் தடுக்க பார்த்தார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை முன்பு துப்பாக்கிச் சூடு நடந்ததே அதில் முதலிடம் கொடுத்தார்களா? சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று நெல்லை கண்ணனை கைது செய்தீர்கள். குண்டு போடுவோம் காலேஜில என்று எச்.ராஜா பேசினாரே அதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? நீதிமன்றம் என்ன பெரிய என்று ஒரு வார்த்தை சொன்னாரே அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா? பெரியார் சிலையை உடைப்போம் என்றாரே? அதற்கு நடவடிக்கை எடுத்தீர்களா? இதுதான் சட்டம் ஒழுங்கா?

பேனர் விழுந்து ஒரு பெண் இறந்துபோனார். அது சம்மந்தமாக ஒரு அதிமுககாரரை பிடிக்க வக்கில்லை. கோர்ட் கண்டனத்திற்கு பிறகுதான் பிடித்தீர்கள். எதில் முதலிடம் நீங்க? உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் திட்டுகிறது அதில்தான் நீங்கள் முதலிடம். ஊழலில் முதலிடம்.

அ.தி.மு.க-வும், பா.ம.க-வும் மாநிலங்கள் அவையில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்து இருக்காவிட்டால் அந்த மசோதா தோற்றுப் போயிருக்கும். இன்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு பற்றி எரிகிறதென்றால் அதற்குக் காரணம் இந்த அ.தி.மு.க தான்.

இவற்றையெல்லாம் 5 நிமிடங்கள் தான் பேசியிருப்பேன். என்னிடம் நிறைய குறிப்புகள் இருந்தன. அத்தனையும் பேச வேண்டுமென்றால் இருபது நிமிடங்கள் தேவை. நான் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார்.

சபாநாயகரிடம் சென்று, நான் தயாரித்த குறிப்புகளைக் காட்டி, இன்னும் 5 நிமிடங்கள் ஆளுநர் உரை மீது பேச வாய்ப்பளிக்கவேண்டும் எனக் கேட்டேன்.

நீங்களும் அரசியல்வாதிதான், இவ்வளவு குறிப்புகள் தயார் செய்ய வேண்டுமென்றால் எவ்வளவு நேரம் ஆகும். நான் தயாரித்து வந்ததை பேச ஐந்து நிமிடம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். ஆனால் அவர் அனுமதி வழங்காமல், பேசக்கூடாது எனக் கூறினார். அவைத் தலைவரே நான் பேசக்கூடாது என்று சொன்னால், நான் யாரை நம்பி இந்த அவைக்கு வருவது. அதனால் தான், ஆளுநர் உரையை சபாநாயகர் முன்பே கிழித்தேன். ஆளுநர் உரை கிழிக்கிற உரை அவ்வளவுதான். ” என்றார்.,


Share this News:

Leave a Reply