முஸ்லிம்களின் ஆதரவைப் பெற திட்டம் தீட்டும் எடப்பாடி!

Share this News:

சென்னை (29 பிப் 2020): குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து கெட்ட பெயரைச் சம்பாதித்த அதிமுக அரசு முஸ்லிம்களின் வாக்குகளைத் தக்க வைக்க புதிய திட்டத்திற்கு தயாராக உள்ளது.

சிஏபி என்று அழைக்கப்படும் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது அதை காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆயினும் மக்களவையில் பிஜேபி அரசுக்கு இருந்த அதீதப் பெரும்பான்மையால் அங்கு அந்தச் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் பிஜேபிக்கு போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் அ.தி.மு.க-வும் பா.ம.க-வும் ஆதரவு தெரிவித்து வாக்களித்ததால் அந்தச் சட்டம் நிறைவேறியது.

இதனால் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் அனைத்தும் அ.தி.மு.க வுக்கு எதிராகக் கொந்தளித்தன. தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களையும் நடத்தின. இந்தச் சட்டத்தை ஆதரித்தது தவறு, இதை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் முதலமைச்சர் எடப்பாடியை நேரடியாகச் சந்தித்து கோரிக்கை வைத்தன.

தமிழகத்தில் சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தொடர் போராட்டம் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் சி.ஏ.ஏ-வினால் தமிழகத்தில் உள்ள எந்தச் சிறுபான்மையினருக்கும் ஆபத்து இல்லை என்று அ.தி.மு.க அரசு தொடர்ந்து சொல்லிவருகிறது. ஆயினும் அந்தப் பொய்யை சிஏஏ எதிர்ப்பாளர்கள் கேட்பதாக இல்லை. கடந்த வியாழக்கிழமை (27.2.2020) இரவு, போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்து பேசியபோது, இதை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாதவரை தங்களது போராட்டம் வாபஸ் பெறப்படமாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேலும் போராட்டமும் மாநிலம் முழுவதும் வீரியம் அடைந்து வருகிறது.

இந்நிலையில் வட இந்தியப் பத்திரிகைகளில், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் என்.ஆர்.சி, என்.பி.ஆர்-க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப் போவதாகச் செய்திகள் வந்துள்ளன. அதிமுக வட்டாரங்களும் இதையே ஆமோதிக்கின்றன. சி.ஏ.ஏ விவகாரத்தில் அ.தி.மு.க உறுப்பினர்கள் அளித்த ஆதரவு ஓட்டுதான் சட்டம் நிறைவேறக் காரணம் எனும் எதிர்க்கட்சிகளின் பரப்புரை தமிழகம் முழுவதும் நன்கு எடுபட்டுள்ளது. இந்த விஷயத்தில் மத்திய அரசை நாம் ஆதரித்திருக்கக் கூடாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் சில அமைச்சர்கள் கருத்து தெரிவித்துள்ளதும் முதல்வரை யோசிக்க வைத்துள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன் மூத்த அமைச்சர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர்களிடம், “நாம் இந்த ஆட்சியில் எத்தனையோ நல்ல திட்டங்களை அறிமுகம் செய்திருந்தும் எனக்கு இப்போது கெட்டபெயரே உள்ளது. குறிப்பாக சி.ஏ.ஏ விஷயத்தில் நாம் அவசரப்பட்டுவிட்டோம். அந்தச் சட்டத்தை நாம் எதிர்த்து வாக்களித்திருந்தால் இன்று தமிழக மக்கள் என்னை ஹீரோவாகக் கொண்டாடியிருப்பார்கள். ஸ்டாலினும் அரசியல் செய்யமுடியாமல் போயிருக்கும். ஆனால் இப்போது பிரச்னை எல்லை மீறிப்போய்விட்டது. மத்திய அரசு பேச்சைக் கேட்டு போலீஸார் மூலம் போராட்டக்காரர்களை ஒடுக்கக்கூடாது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 9-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது. அப்போது என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய இரண்டுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றலாமா என்றும் அவர்களிடம் முதலமைச்சர் ஆலோசனை செய்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றினால் அதற்குப் பிறகு ஏற்படும் நெருக்கடிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டுள்ளன. தவிர சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததைப் போல் என்.ஆர்.சி, என்.பி.ஆர் விசயத்திலும் அமைதியாக இருந்துவிடக் கூடாது என்று மனநிலையில் முதலமைச்சர் எடப்பாடி இருப்பதாகவும், அதனால் சர்ச்சைக்குரிய கேள்விகள் எதிலும் சிக்காமல் 2010-ம் ஆண்டு நடத்திய கணக்கெடுப்பைப் போன்று இந்த ஆண்டும் நடத்திவிட வேண்டும் என்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது.

இதனால், இரவு பகல் பாராமல் போராடி வரும் தமிழக மக்களுக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.


Share this News:

Leave a Reply