தமிழகத்திலும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு!

Share this News:

சென்னை (23 மார்ச் 2020): தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதுவரை உலக அளவில் 15 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனில் இருந்து சென்னை திரும்பிய 25 வயது இளைஞர், லண்டனில் இருந்து திருப்பூர் திருப்பூர் திரும்பிய 48 வயது நபர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது; வீட்டில் தனிமையாக இருங்கள் என்பது வேண்டுகோள் அல்ல, அரசின் உத்தரவு ஆகும். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அதிகம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி அடையாளப்படுத்தப்படுகிறது. மதுரையில் பாதிக்கப்பட்ட நபருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனோவால் பாதிக்கப்பட்ட மதுரை நபர் எந்த வெளிநாட்டுக்கு வெளிமாநிலத்துக்கும் சென்றதில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்களுடன் மதுரை நபர் தொடர்பில் இருந்தாரா என்று ஆய்வு நடைபெறுகிறது. தமிழகத்திற்குள்ளேயே இருந்து கொரோனா உறுதி செய்யப்பட்ட முதல் நபர் மதுரையை சேர்ந்தவர்.

தமிழகம் முழுவதும் 12,519 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். கொரோனா சிகிச்சைக்காக சென்னை ஓமாந்தூரார் அரசு மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட பிரத்யேக மருத்துவமனையாக்கப்படுகிறது. ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் மற்ற சிகிச்சைகளுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply