நாடாளுமன்றம், சட்டமன்றம் கூட்டியவர்கள் மீது வழக்கு போடுவீர்களா?: ஆளூர் ஷாநவாஸ் சரமாரி கேள்வி!

Share this News:

சென்னை (02 ஏப் 2020): கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பு கூடிய நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றை கூட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா? என்று ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா அதிக அளவில் பரவி வருகின்றது. இந்தியாவில் 50 க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்களுக்கு முடிந்த வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது இப்படியிருக்க தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு கூடிய டெல்லி தப்லீக் ஜமாத்தை மட்டும்  அரசும் ஊடகங்களும் குற்றம் சுமத்துவது ஏன்? என்று ஆளுர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தனியார் இதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

“கொரோனாவை தடுக்க இந்தியாவில் தடை உத்தரவு பிறப்பிக்கப் படுவதற்கு முன்பே தப்லீக் ஜமாத்தினர் டெல்லியில் கூட்டம் கூட்டியுள்ளார்கள். அந்தக் கூட்டம் நடைபெற்ற காலத்தில் நாடாளுமன்றம் நடைபெற்றது. சட்டமன்றம் நடைபெற்றது. எனவே அப்போது கூட்டம் கூடக்கூடாது என்ற எந்தச் சட்டமும் இல்லை. மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்த பிறகு இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. அப்படி நடைபெற்றால் கூட இதை ஒரு காரணமாகச் சொல்லலாம்.ஆனால், கூட்டம் கூடுவது தடை செய்யப்படாத காலகட்டத்தில் ஏன் கூடினீர்கள் என்று தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கலந்து கொண்டார்களே? என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அந்தக் கூட்டத்தில் மட்டும் தான் கலந்து கொண்டார்களா? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்தாரே, அவரை வைத்து மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார்களே அது ஞாபகம் இல்லையா? அந்த நேரத்தில் இந்தியாவில் வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டு தானே இருந்தது. எப்பொழுது இருந்து வெளிநாட்டினர் இந்தியா வர தடை போட்டார்கள், விசா கொடுக்க மறுத்தார்கள்? எல்லாம் இந்த ஒரு வாரக்காலத்தில் தானே? பிறகு எப்படித் தடை உத்தரவுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தை, தற்போது பிடித்துக்கொண்டு தொங்குவது எதற்காக?” என்றார்.

மேலும் ‘டெல்லி ஜமாத்தில் கூடிய சிலருக்கு கொரோனா இருப்பதாக சொல்லப்படுகிறதே?’ என்ற கேள்விக்கு ஆளூர் ஷாநவாஸ் அளித்துள்ள பதிலில், “எல்லா இடத்திலும் தான் அந்த பாதிப்பு இருக்கின்றது. இன்றைக்கு ஃபீனிக்ஸ் மால்-ஐ அரசாங்கம் அடையாளப்படுத்தி இருக்கின்றது. 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை அந்த மாலுக்கு வந்தவர்கள் எல்லாம் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏன் என்றால் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். நிலமை இப்படி இருக்க அங்கே ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்களே அவர்களை எப்படிச் சோதிக்க போகிறீர்கள்?, முதலில் அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்? டெல்லிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியல் இருக்கின்றது. அதன் மூலம் அவர்களை அடையாளப்படுதுகிறீர்கள். ஆனால் இந்த மாதிரி மால்களில் கூடியவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்.?

எல்லாம் அப்படித்தான் ஃபீனிக்ஸ் மாலில் கூடியவர்கள் தானாக முன் வந்து கொரோனா சோதனை செய்து கொள்ள கோரிக்கை வைக்கப் பட்டுள்ளதைப் போலவேதான் தப்லீக் ஜமாத்தினருக்கும் பொருந்தும். இவர்களை ஒரு சமூக விரோத செயல் செய்ததைப் போல ஏன் சித்தரிக்க வேண்டும்? அவர்களால்தான் இந்த தொற்று பரவியதைப் போல் ஏன் தகவல்களைப் பரப்பிவிட வேண்டும்? வெளிநாட்டில் இருந்து வந்திருக்கார்கள் என்றால் அனுமதி இருந்தது அதனால் வந்திருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கின்றது? அவர்கள் முறையாக விசா பெற்றுதானே வந்துள்ளார்கள். டெல்லி மாதிரி ஒரு பெரிய இடத்தில் ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் போது அது எப்படி அரசுக்குத் தெரியாமல் நடக்க முடியும். எப்படி உள்ளூர் காவலர்களுக்குத் தெரியாமல் நடக்க முடியும்?

கூட்டம் கூட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக கூறுகிறார்கள். எதற்காக, என்ன சொல்லி வழக்குப் போடுவார்கள்? ஊரடங்கிற்கு முன்னால் நாடாளுமன்றத்தில் கூடியிருக்கிறார்களே, சட்டசபை கூடியிருக்கிறதே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? அரசாங்கமே மக்கள் கூடியிருக்கிறார்கள் என்று வணிவ வளாகங்களைக் கைக்காட்டுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் கூடி கலைந்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இதைப் பெரிது படுத்த வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது? என்று ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேபோல கொரோனா பரவலுக்கு மதச்சாயம் பூசுவதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


Share this News:

Leave a Reply