கொந்தளித்த அதிமுக – தடுமாறும் பாஜக!

Share this News:

சென்னை (23 ஜன 2020): பெரியார் குறித்த ரஜினியின் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதன் கூட்டணி கட்சியான பாஜகவோ, ரஜினிக்கு ஆதரவு அளித்து வருகிறது.

கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, “1971 சேலத்தில் பெரியார் அவர்கள், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சிலையை, உடையில்லாமல், செருப்பு மாலை போட்டு ஊர்வலமா எடுத்துட்டுப்போனாரு” என்று பேசியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரஜினி தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என திகவினர் கோரியிருந்தனர்.

ஆனால் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் பூதாகரமானது.

இது இப்படியிருக்க ரஜினியில் கருத்தை எதிர்த்து அதிமுக தலைவர்கள் பேட்டி அளித்து வருகின்றனர். குறிப்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ”பெரியார் குறித்து தெரிந்து பேச வேண்டும். பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்க வேண்டியவை. என்னைப் போன்றவர்கள் உயரிய நிலையை அடைவதற்கு பெரியாரே காரணம்!” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்களும் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாஜக சொன்னால் அனைத்திற்கும் தலையாட்டிக் கொண்டிருந்த அதிமுக தலைமையில் தற்போது பெரியார் விவகாரத்தால் புகையத் தொடங்கியுள்ளது புலப்படுகிறது.

ஏற்கனவே பாஜகவுடன் அமைத்துள்ள கூட்டணியால் எதிர் வரும் தேர்தலில் சிறுபான்மையினரின் முழு வாக்குகளையும் இழக்க நேரிடும் நிலை உள்ளதால் பாஜகவின் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ள அதிமுக விரும்புவதாகவே சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன.

இதற்குச் சான்றாக, அதிமுக பாஜகவிடமிருந்து விலகி தனியாக செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply