இந்தியா அபாரம் – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்று சாதித்தது!

368

பெங்களூரு (19 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ அணி.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு ஹேசல்வுட் வாய்ப்பு பெற்றார்.

ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர், கேப்டன் பின்ச் மோசமான துவக்கம் தந்தனர். ஷமி ‘வேகத்தில்’ வார்னர் (3) ஆட்டமிழந்தார். பின்ச் (19) ரன் அவுட்டானார். ஸ்டீவ் ஸ்மித், லபுசேன் பொறுப்புடன் விளையாடினர். ஜடேஜா பந்தில் லபுசேன் (54) அவுட்டானார். அபாரமாக விளையாடிய ஸ்மித் ஒரு நாள் அரங்கில் 9வது சதம் அடித்தார். ஷமி பந்தில் ஸ்மித் (131), கம்மின்ஸ் (0) ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 286 ரன்கள் எடுத்தது. ஏகார் (11), ஹேசல்வுட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி 4 விக்கெட் கைப்பற்றினார்.

இதைப் படிச்சீங்களா?:  இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல்!

இந்திய அணிக்கு ரோகித், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் அளித்தது. ராகுல் 19 ரன்களில் அவுட்டானார். எதிரணி பந்துவீச்சை சிதறடித்த ரோகித் ஒரு நாள் அரங்கில், 29வது சதம் அடித்தார். கோஹ்லி அரை சதம் கடந்தார். ஜாம்பா ‘சுழலில்’ ரோகித் (119) சிக்கினார். கோஹ்லி 89 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் சிறப்பாக விளையாடினார். மணிஷ் பாண்டே பவுண்டரி அடிக்க, இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (44), மணிஷ் பாண்டே (8) அவுட்டாகாமல் இருந்தனர். இதனையடுத்து, இந்திய அணி தொடரை 2-1 என கைப்பற்றி கோப்பை வென்றது.