இந்தியாவில் சுய ஊரடங்கு உத்தரவு தொடங்கியது – கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்வு!

புதுடெல்லி (22 மார்ச் 2020): இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று சுய ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் , இந்தியாவின் முக்கிய மாநகரங்கள், நகரங்கள் அனைத்தும் வெறிச்சோடியுள்ளன. மக்கள் நடமாட்டமோ, வாகனப் போக்குவரத்தோ இல்லாமல் தெருக்கள், சாலைகள் துடைத்து வைத்ததைப் போல காட்சியளிக்கின்றன.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களாக நாட்டில் இதுவரை 332 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில் 39 பேர் வெளிநாட்டவர்களாவர். அவர்களில் 17 பேர் இத்தாலி, 3 பேர் பிலிப்பின்ஸ், 2 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.

அதுதவிர, கனடா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவரும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் உள்ளனர்.

மொத்த எண்ணிக்கையில், 256 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 23 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிவிட்டனர். 4 பேர் உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்த நால்வர் தில்லி, கர்நாடகம், பஞ்சாப், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்களாவர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை 10 மணி வரை, மொத்தம் 16,021 நபர்களின் 16,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கவுன்சில் கூறியுள்ளது.

மாநிலங்கள்: நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 63 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக கேரளத்தில் 40 பேரும், தில்லியில் 27 பேரும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அது தவிர உத்தரப் பிரதேசத்தில் 24, தெலங்கானாவில் 21, ஹரியாணாவில் 17, ராஜஸ்தானில் 17, கர்நாடகத்தில் 15, லடாக்கில் 13, பஞ்சாபில் 13 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் 7, மத்தியப் பிரதேசத்தில் 4, ஜம்மு-காஷ்மீரில் 4, ஆந்திரத்தில் 3, உத்தரகண்டில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஹிமாசல பிரதேசத்தில் 2, ஒடிஸாவில் 2, புதுச்சேரியில் 1, சண்டீகரில் 1, சத்தீஸ்கரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, மஸ்கட்டில் இருந்து வந்த காஞ்சிபுரம் பொறியாளர், புதுதில்லியில் இருந்து வந்த உத்தரப் பிரதேச இளைஞர், அயர்லாந்தில் இருந்து வந்த எம்பிஏ மாணவர் உள்ளிட்ட மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், தாய்லாந்தில் இருந்து வந்த 2 பேருக்கும், நியூஸிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply