சைக்கோ – சினிமா விமர்சனம்!

Share this News:

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாணியைக் கையாண்டு, படங்களைக் கொடுத்து வருபவர் மிஷ்கின். த்ரில்லர் படங்களில் மிகவும் கை தேர்ந்த இயக்குநரான மிஷ்கின் இயக்கத்தில் வந்துள்ள படம் “சைக்கோ”.

இளம் பெண்கள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு அடுத்த நாள் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு தலையில்லாத முண்டமாக வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம் (இயக்குனர்) விசாரித்து வருகின்றார்.

ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் காவல்த்துறையே என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதுங்கி இருக்கின்றனர். அதிதி ராவ்-யை உதயநிதி ஒருதலையாக காதலித்து வர, ஒருநாள் திடீரென்று அதிதியும் அந்த சைக்கோவால் கடத்தப்படுகின்றார்.

காவல்துறையினரிடம் எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் வேகம் எடுக்காமல் இருக்கின்றனர். இதனால், உதயநிதியே இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்குகிறார். அத்துடன், உடல்நலக்குறைவால் வேலையில்லாமல் இருக்கும் நித்யா மேனன் உதவியுடன் அதிதி ராவ்-யை அந்த சைக்கோவிடமிருந்து மீட்டாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

மிஷ்கின் படம் என்றாலே நடிகர் நடிகைகள் அனைவர் உருவிலும் மிஷ்கினே தெரிவார். அந்த வகையில் கண் தெரியாதவராக உதயநிதி மிகவும் மெனக்கெட்டு நடித்துள்ளார் என்று சொல்வதைவிட, கண் தெரியாதவர்கள் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்துள்ளார். அவருக்கு பக்கபலமாக சிங்கம்புலியும் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் எமோஷனல் என கலந்து கட்டி ஸ்கோர் செய்துள்ளார்.

காவல்துறை அதிகாரியாக ராம்-க்கு பெரிய அளவில் களம் இல்லை என்றாலும், உனக்கு நம்பிக்கை ஏற்படுத்தத் தான் என்னை இங்கே கொண்டு வந்துள்ளார்கள் என்று அதிதியிடம் சொல்லி தூதுவன் போல் வந்து செல்கின்றார். இப்படி பல காட்சிகள் நாம் படித்த கதைகளின் வழியே மிஷ்கின் சுவாரஸ்யமாகக் கதை சொல்லியுள்ளார்.

படத்தில் சைக்கோவாக வரும் இளைஞன், தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு. அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் பதைபதைக்க வைக்கின்றது. அதிலும் கிளைமேக்ஸில் சர்ச் செட்டப்பில் தனக்கு நடந்ததை அவர் சொல்லும் காட்சி, எல்லோரையும் கலங்க வைக்கின்றது.

இந்த படத்திற்கு இலகிய மனமுடையோர் கண்டிப்பாக செல்லாதீர்கள் என்பதே நம் ஒரே அட்வைஸ். தலையை வெட்டி, உடலை மட்டும் காட்டும் காட்சிகள் எல்லாம் அட தமிழ் சினிமா தானா இது? என்று கேட்க வைக்கின்றது, அதற்குப் பக்கபலமாக இருந்த சென்சார் அதிகாரிகளையும் பாராட்டலாம்.

நித்யா மேனன், உதயநிதி இருவரும் தங்களுக்கு ஒரு குறை இருந்தும், அதை குறையாக பார்க்காமல் இயல்பாக கடந்து செல்ல நினைப்பது, அதிலும் துவண்டு இருக்கும் நித்யாவை கன்னத்தில் அறைந்து அவரை மீட்டுக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் வசனங்களும் அருமையாக வந்துள்ளன. “இங்கு மேல் சாதி, கீழ் சாதி என்று ஒன்றுமே இல்லை எல்லாமே பன்னிங்க தான்!” என்று சொல்லும் காட்சி ஒன்று போதும். புத்தர் பற்றிய தொகுப்பில் வரும் அங்குமாலி என்ற கொடூரன் எப்படி மனமாற்றம் அடைந்தான், புத்தர் அவனை என்ன சொல்லி திருத்தினார் என்பதன் மிஷ்கின் வெர்ஷனாகவே இந்த சைக்கோ பார்க்கப்படுகிறான்.

படத்தில் கண்ணுக்கு தெரியாத ஹீரோக்கள் என்றால் தன்வீர் ஒளிப்பதிவும், இளையராஜாவின் இசையும் தான், அதுவும் ஒரு காட்சியில் உதயநிதி கார் ஓட்ட, நித்யா மேனன் வழி சொல்வது போல் வருவது, நாமே காரில் உட்கார்ந்து பயணித்த அனுபவம், லைட் வெளிச்சத்தில் பாதைகள் மறைவது போல் காட்டிய காட்சி எல்லாம் க்ளாஸ்! இவர்கள் எல்லோரையும் விட அனைவரையும் மிஞ்சி, மிரட்டியது என்றால் இளையராஜாவின் பின்னணி தான். பதட்டத்தின் உச்சிக்கு நம்மை காட்சிக்கு காட்சி அழைத்து செல்கின்றது.

மிஷ்கினின் மற்றும் ஒரு வித்தியாசமான படைப்பு!


Share this News:

Leave a Reply