கொடிய நோயின் கோரத்தாண்டவமும் அரசின் நடவடிக்கையும்- ‘அம்வாஸின் பிளேக்’ வரலாற்றுக் குறிப்பு!

Share this News:

பாலஸ்தீனில் ஜெருசலம் நகருக்கும் ரம்லாவுக்கும் இடையே அம்வாஸ் என்றொரு சிறிய நகரம் அமைந்துள்ளது. கி.பி. 639-ம் ஆண்டில் அந்த ஊரில் பிளேக் நோய் தோன்றியது. சிறிது சிறிதாகப் பரவியது. வெகு விரைவில், அது பெருந் திகிலூட்டும் நிகழ்வாகவும் மாறியது. `அம்வாஸின் பிளேக்’ என்ற பெயரில் வரலாற்றில் வெகு அழுத்தமாகப் பதிவாகும் அளவுக்குப் பிரமாண்டமாய் உருமாறியது அந்நோய்.

இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பக் காலத்தை அறிந்தவர்களுக்கும் பல வாசகர்களுக்கும் உமர் என்ற பெயர் அறிமுகமாகியிருக்கும். முஸ்லிம்களுக்கும் நபி பெருமானாருக்கும் பெரும் எதிரியாகத் திகழ்ந்தவர் அவர். பின்னர் இஸ்லாத்தை ஏற்று நபியவர்களின் அணுக்கமான தோழர்கள் இருவருள் ஒருவராகி விட்டவர். நபியவர்களின் மறைவுக்குப் பிறகு இஸ்லாமிய ஆட்சியின் இரண்டாவது கலீஃபாவாக அவருக்குப் பொறுப்பு வந்து சேர்ந்து அதை ஏற்றுக்கொண்டு ஆட்சி நடத்தினார் உமர். அக்காலத்தில் மதீனா நகரம்தான் இஸ்லாமிய ஆட்சியின் தலைநகராகத் திகழ்ந்தது. கலீஃபா உமர் அங்கிருந்து தம் தோழர்கள் சிலருடன் சிரியாவுக்குப் பயணம் கிளம்பினார். சிரியாவிலுள்ள ஆளுநர்களையும் போர் வீரர்களையும் சந்தித்துவிட்டு வருவது என்பது திட்டம். அந்தக் குழு சர்க் (Sargh) என்ற எல்லைப் பகுதியை அடைந்தது. முகாமிட்டது. அச்சமயம்தான் அம்வாஸில் பிளேக் நோய் தோன்றி, தீவிரமாகப் பரவத் தொடங்கி, உயர்ந்து கொண்டிருந்தது மரண எண்ணிக்கை.

கலீஃபா உமர் அவர்களைப் படைத் துருப்புகளின் தலைவர்கள் சந்தித்து, “இச்சமயம் இப்பகுதியில் நிலைமை சரியில்லை. பிளேக் நோய் தோன்றி, மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் மரணமடைகின்றனர். நீங்கள் அங்கு செல்வது உசிதமில்லை” என்று தகவல் தெரிவித்தார்கள். தம் மக்களையும் நண்பர்களையும் அவர்கள்தம் குடும்பத்தினரையும் துன்பம் தாக்கியிருக்க, கண்டும் காணாமல் போவது எப்படி என்று கலீஃபா உமருக்கு ஏகப்பட்ட கவலை, வருத்தம். அங்கிருந்தவர்களிடம் ஆலோசனை புரிந்தார். அப்பொழுது நபி பெருமானாரின் தோழர்களுள் முக்கியமானவரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் என்பவர், “இந்த நோய் ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அங்கு செல்ல வேண்டாம். நீங்கள் இருக்கும் ஊரை அந்த நோய் தாக்கியிருந்தால் அங்கிருந்து வெளியேற வேண்டாம்” என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னார்.

தனிமைப்படுத்தல், லாக் டவுண் ஆகியன உள்ளடங்கியிருந்த முக்கிய அறிவுரை அது. அதன் அடிப்படையில் தீவிர ஆலோசனை நடைபெற்றது. பிறகு கனத்த இதயத்துடன் கலீஃபா உமர் தம் குழுவினருடன் மதீனா திரும்பினார். அம்வாஸ் நகரில் முழு வீரியத்துடன் பரவித் தாக்கத் தொடங்கியது பிளேக். நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுடன் இணைந்திருந்தவர்கள் சஹாபாக்கள் என்று குறிப்பிடப்பட்டனர். தமிழில் எளிமையாகச் சொல்வதென்றால் தோழர்கள். அத்தோழர்களுள் முக்கியமானவர்கள் அம்வாஸில் வசித்து வந்தனர். அவர்களுள் பலரையும் இந்த பிளேக் நோய் விட்டு வைக்கவில்லை. அந்நோய்க்கு அவர்களும் இரையாகிக்கொண்டு இருந்தார்கள். இன்று கொரோனா நோய் சுற்றி வளைத்திருப்பதைப் போல்தான் அன்று அம்வாஸ் பகுதியை பிளேக் ஆக்கிரமித்திருந்தது. இருபதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அந்நோயினால் மரணமடைந்தார்கள் என்கிறது வரலாறு. அந்த எண்ணிக்கையானது அன்றைய சிரியாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி!

ராணுவத் தலைவர்களாகத் தலைமை ஏற்றிருந்த அபூ உபைதா, முஆத் இப்னு ஜபல் என்ற வெகு முக்கிய தோழர்களுக்கும் பிளேக் நோய் பரவி அடுத்தடுத்து மரணமடைந்தார்கள் அவர்கள். அதையடுத்து அம்ரு இப்னுல் ஆஸ் என்ற தோழரிடம் தலைமைப் பொறுப்பு வந்து சேர்ந்தது. நோயும் ஒரு முடிவின்றி பரவிக்கொண்டிருந்தது. கவலையுடன் யோசித்தார் புதிய தலைவர் அம்ரு. ஓர் எண்ணம் தோன்றியது. மக்களிடம், “இந்த நோயோ காட்டுத்தீ போல் பரவுகிறது, இங்கிருக்கும் நிலப்பரப்பில் நிலைமை மோசமாக உள்ளது. எனவே, அருகிலிருக்கும் மலைகளில் ஏறித் தப்பிப்போம்” என்று யோசனை ஒன்றைத் தெரிவித்தார். அனைவருக்கும் அதுவே உசிதம் என்று தோன்றியது. பிறகு அவர்கள் வேறு என்னதான் செய்வார்கள்? அத்திட்டப்படி தலைவர் அம்ருவும் மற்றும் பலரும் மலைகளில் ஏறி, விலகி இருக்கத் தொடங்கினர். Social distancing என்று இன்று நமக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கும் ஏற்பாட்டைத்தான் அந்த மலைகளில் அவர்கள் செயல்படுத்தினர். அதன்பின், ஒரு வழியாக இறையருளால் அந்நோய் தணிந்து, மாண்டவர் போக, மற்றவர்கள் மீண்டனர்.

தாம் அந்த முடிவை எடுத்தபோது ராணுவத் தலைவரான அம்ரு மதீனாவில் இருந்த கலீஃபாவுக்குக் கடிதம் எழுதினார். அதில், மலைக்கு ஏறிவிடுவதால் மட்டும் மரணத்தை விட்டு விலகி ஓடிவிட முடியும், இறைவனின் கட்டளையைத் தடுத்துவிட முடியும் என்று நான் நம்பவில்லை என்று ஒரு வரி குறிப்பிட்டிருந்தார்.

எவ்விஷயத்திலும் இறைவன் நிர்ணயித்த விதியின்படி நடப்பது நடக்கத்தான் செய்யும். ஆனால் நாம் நம்மாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், தற்காப்பைக் கடைப்பிடிக்க வேண்டும், அறிவுக்கு எட்டிய சாத்தியங்களை ஆராய வேண்டும் என்பதே அடிநாதம்.

-நூருத்தீன்

நன்றி: விகடன்


Share this News:

Leave a Reply