பொருளாதார அடியாள் பகுதி -7 பணம் வந்த கதை

பணம் வந்த கதை – தொடர்!
Share this News:

‘பொருளாதார அடியாள்’ பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவர்கள் கோட் சூட் போட்ட நவீன அடியாட்கள். இப்பூமியின் இயற்கை வளங்களை, அவற்றிலிருந்து கிடைக்கும் பலன்களை, சில குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் பணம் படைத்த சில குடும்பங்களின் ஆளுகைக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் இவர்களின் வேலை.

இது ஒரு வகையான கார்ப்பரேட் சாம்ராஜ்யம். இந்த அடியாட்களின் மோசடிகளையெல்லாம் சர்வசாதாரணமாக மில்லியன், பில்லியனை எல்லாம் தாண்டி டிரில்லியனில்தான் கணக்கு போட வேண்டியிருக்கும். இவர்களின் சேவைக்காக இவர்கள் பெரும் ஊதியமும் பெருமளவில் இருக்கும். தங்கள் திட்டம் நிறைவேறுவதற்காக எந்த பஞ்சமாபாதகத்தையும் செய்ய இவர்கள் தயங்குவதேயில்லை. பொய்யாக ஜோடிக்கப்பட்ட திட்ட அறிக்கைகள், தேர்தல்களில் முறைகேடுகள், லஞ்சம், பிளாக்மெயில், செக்ஸ், கொலை என எதற்குமே இவர்கள் தயார். அப்படி ஒரு அடியாளாக இருந்து பின் மனம் திருந்தி அத்தொழிலிருந்து வெளியேறியவர் ஜான் பெர்கின்ஸ். அவர் எழுதிய ‘Confessions of an Economic Hit Man’ எனும் புத்தகத்தில் அவர் விவரித்துள்ள பல விஷயங்கள் ‘பகீர்’ ரகமானவை.

“கார்ப்பரேட் சாம்ராஜ்ய அதிபதிகளின் கடைக்கண் பார்வை ஏதோ ஒரு நாட்டின் மீது விழுந்து விட்டால், அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வதற்கான சாம, பேத, தான, தண்ட திட்டங்களோடு பொருளாதார அடியாட்கள் களத்தில் இறங்குவார்கள். உடனே தமிழ் படங்களில் வருவதைப் போல ‘அண்ணன் ஆசைப்பட்டுட்டாரு, மரியாதையா பத்திரத்துல கையெழுத்தைப் போடு’ என்றெல்லாம் கற்பனையை ஓட்டாதீர்கள். பழம் நழுவி தானாகவே பாலில் விழுவதைப் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதுதான் அவர்களின் திட்டங்களின் முதல் படியாக இருக்கும்.

“ஏதாவது ஒரு அரசு சாரா அமைப்பு அல்லது ஒரு பெரிய கன்சல்டிங் கம்பெனி போன்ற ஒரு நிறுவனத்தின் பிரதிநிதி என்ற போர்வையில் இந்த பொருளாதார அடியாட்கள் குறி வைக்கப்பட்ட நாடுகளில் ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களை அணுகுவார்கள். அந்த நாட்டில் ஒரு பெரும் மின்சார உற்பத்தி ஆலை, நெடுஞ்சாலை, துறைமுகம், விமான நிலையம், அணைக்கட்டு, தொழிற்பேட்டை என்று ஏதோ ஒன்றை அமைத்துத் தர தங்களிடம் அருமையான திட்டங்கள் இருப்பதாக வலை விரிப்பார்கள்.

‘அந்த அளவுக்கெல்லாம் எங்களிடம் வசதி இல்லையே’ என்று கைவிரிப்பவர்களிடம், ‘அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க? உலக வங்கியில் அதற்கான கடனைப் பெற்று இதைக் கட்டித்தருவதற்கு நாங்களாச்சு’ என்று ஆசை வார்த்தைகள் தொடரும்.

‘அந்தக் கடனை நாங்க எப்படி அடைக்கிறது?’

‘அதெல்லாம் தன்னால நடக்கும். தோ பாருங்க.. ப்ராஜெக்ட் ரிப்போர்ட். இந்த ப்ராஜெக்ட் மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா உங்க நாட்டு பொருளாதாரம் வருஷத்திற்கு 20 சதவீதம் உயரும். வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பேச்சே இருக்காது. உங்க நாட்டுல பாலாறும் தேனாறும்தான் ஓடும். அப்புறம் என்ன.. எல்லாம் சுபமே!’

இதற்கு மேலும் தயக்கம் காட்டுபவர்களை ‘கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிப்பதும்’ நடக்கும்.

“இது போன்ற திட்டங்களில் ஒரு முக்கியமான நிபந்தனை என்னவென்றால், அதன் கட்டுமானப் பணிகள் மற்றும் பொறியியல் வேலைகளுக்கான கான்ட்ராக்ட், நாம் மேலே சொன்ன கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் அங்கமாக இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும். அவை பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களாகத்தான் இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. கூட்டிக் கழிச்சுப் பார்த்தீங்கன்னா, அந்த ஏமாளி நாட்டின் தலையில் கடன் சுமை ஏறியிருக்கும் அதே வேளையில் அதற்கான பணம் அமெரிக்காவை விட்டு வெளியே போயிருக்காது. வாஷிங்டனில் உள்ள ஏதோ ஒரு வங்கிக் கணக்கிலிருந்து நியூயார்க்கிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு அது மாற்றப் பட்டிருக்கும்.

“அடேடே!”

“இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இது வெறும் தூண்டில்தான். இனிமேதான் இருக்கு விஷயமே. பணம் அமெரிக்காவுக்குள்ளேயே சுத்திக் கிட்டிருந்தாலும் ஏமாளி நாட்டுக்கு அது கடன்தானே? அதை அவங்க திருப்பி செலுத்தித்தானே ஆகணும்? அதுவும் வட்டியும் முதலுமா! கடனை வாங்கிக் கொடுத்த பொ.அடியாள் திறமைசாலியாக இருந்தால் அந்தக் கடன் அடைக்கவே முடியாத அளவிற்கு பெரியதாக இருக்கும். ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டில் சொல்லியபடி வருமானமும் வந்திருக்காது. சில ஆண்டுகளிலேயே கடனை தொடர்ந்து அடைக்க முடியாத நிலைக்கு வந்திருக்கும் அந்நாடு. இக்கட்டான நிலைதான்! ஏற்கனவே கார்ப்பரேட் சாம்ராஜ்ய அதிபதிகளால் ஏகமாக ‘கவனிக்கப்’ பட்டிருந்த ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எதிராக முணுமுணுக்கக்கூட முடியாது.

இந்த சூழ்நிலையை எதிர்பார்த்து காத்திருந்த பொ. அடியாட்கள் மீண்டும் அந்த ஆட்சியாளர்களிடம் வருவார்கள். ‘அச்சச்சோ..! நாம எதிர்பார்த்த மாதிரி வருமானம் வரலை போலிருக்கே? நீங்க கடனை வேற அடைச்சாகணுமே! இப்ப என்ன பண்ணலாம்?’ என்று அனுதாபப்படுவார்கள். ‘சரி.. இப்ப ஒன்னும் குடி முழுகிப்போயிடலை. நான் சொல்ற மாதிரி கேட்டீங்கன்னா கடனை அடைக்க இன்னும் கொஞ்ச நாள் தவணை வாங்கித் தருவது என் பொறுப்பு’. இதற்கு தலையாட்டுவதைத் தவிர ஆட்சியாளர்களுக்கு வேறு வழி இருக்காது.

‘நீங்க என்ன பண்றீங்க.. அடுத்த மாசம் ஐ.நா. சபையில இன்னின்ன விவகாரம் ஓட்டெடுப்புக்கு வரும். அப்போ, நாங்க கைகாட்டுற பக்கம் உங்க ஓட்டை குத்துறீங்க.. என்ன சரியா?’

அல்லது, ‘உங்க நாட்டுல நாங்க சொல்ற ஒரு துண்டு நிலத்தை எங்களுக்கு பட்டா போட்டுத் தர்றீங்க.. அதுல ஒரு ராணுவத் தளமோ, குவான்டனாமோ ஸ்டைல்ல ஒரு சிறைச்சாலையோ, அல்லது ஏதோ ஒன்னு நாங்க அமைச்சுக்குவோம்’.

அல்லது, ‘உங்க நாட்டு எண்ணைக் கிணற்றிலேருந்து எடுக்கும் அவ்வளவு எண்ணையையும் நாங்க சொல்ற எண்ணைக் கம்பெனிக்கு மட்டும்தான் விற்கணும். அதுவும் நாங்க சொல்ற விலையில’.

பிறகென்ன? கார்ப்பரேட் சாம்ராஜ்யத்திற்கு அடிபணிந்து கப்பம் கட்ட இன்னொரு அடிமை நாடு ரெடி!

கிட்டத்தட்ட இதே நிலை ஏற்பட்டது ஈக்வடோருக்கு. பொருளாதார அடியாட்களால் பரிந்துரைக்கப்பட்ட கட்டுமானப் பணிகளுக்காக ஈக்வடோர் தலையில் பெரும் கடன் சுமை சுமத்தப் பட்டிருந்தது. அந்நாட்டு பட்ஜெட்டில் பெரும் பகுதி கடன் தவணை செலுத்துவதற்காகவே ஒதுக்க வேண்டியிருந்தது. நாட்டு நலப் பணிகளெல்லாம் முடங்கிப் போயின. பொதுமக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எதையும் செயல்படுத்த பணம் இல்லை. தனது கடன் சுமையை சிறிதளவாவது குறைப்பதற்கு ஈக்வடோருக்கு இருந்த ஒரே வழி அந்நாட்டின் எல்லைக்குள் இருக்கும் அமேசான் காடுகளின் ஒரு பகுதியை அமெரிக்க எண்ணை நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதுதான்.

இன்று ஈக்வடோரின் அமேசான் காட்டுப்பகுதியில் அங்கு வசிக்கும் பழங்குடியினரின் எதிர்ப்புகளையெல்லாம் மீறி அமெரிக்க எண்ணை நிறுவனமான Shell-லின் பெயரிலேயே ஒரு நகரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.!

தொடரும்

– சலாஹுத்தீன் பஷீர்


Share this News:

Leave a Reply