பணம் வந்த கதை – பகுதி 11: கள்ளச் சீட்டும் ‘நல்ல’ சீட்டும்!

பணம் வந்த கதை – தொடர்!
Share this News:

நிர்வாகச் சபைத் தலைவர்களின் கூட்டத்தில் ‘கள்ளச் சீட்டுகளைத் தடுக்க ஒரே வழிதான் இருக்கிறது’ என்று சொன்ன அய்யாவு, “துண்டுச் சீட்டுகளை பொற்கொல்லர்களாகிய நாங்கள் எழுதிக் கொடுப்பதற்குப் பதிலாக நிர்வாகச் சபையே அவற்றை அச்சிட்டு வெளியிடுவதுதான் ஒரே வழி” என்றார்.

“ஏன் அப்படிச் சொல்கிறீர்?” என்று கேட்டார் ஒரு தலைவர்.

“நாம் முதல் முதலாக தங்க நாணயங்களை வெளியிட்டோமே, நினைவிருக்கிறதா? வெளியார் யாரும் தங்கத்தை உருக்கி அவர்களே நாணயங்களை செய்து கொள்ளக் கூடாது என்பதற்காக நிர்வாக சபையின் ஒப்புதலுடன் ஒரு ஸ்பெஷல் முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்களைத்தானே வெளியிட்டோம்? அது போலத்தான் இதுவும். நிர்வாகச் சபை வெளியிடும் சீட்டுகள் அதிகார பூர்வமானவையாக இருக்கும். அதை போலியாக தயாரிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் கள்ளச் சீட்டுகள் குறையும். போலியாக தயாரிக்க முடியாதபடி பாதுகாப்பு அம்சங்களையும் அதில் இணைத்து விடலாம்.” என்று விளக்கினார் அய்யாவு.

“அதெல்லாம் சரிதான். இருந்தாலும்…” என்று இழுத்தார் இன்னொருவர்.

“உங்கள் தயக்கம் புரிகிறது. இந்த ‘நாணயச் சீட்டு’களை அச்சடிப்பதற்கான செலவுகளை பொற்கொல்லர்களாகிய நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்”

அப்புறம் என்ன? “இது நல்ல யோசனைதான். கள்ளச் சீட்டுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதை விட்டு காப்பாற்றும் பொறுப்பு நிர்வாகச் சபைக்கு உண்டுதானே?” என தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக அய்யாவுவின் யோசனையை ஏற்றுக் கொண்டனர்.

“இன்னொரு விஷயம்.. நிர்வாகச் சபையின் முத்திரை இல்லாத தங்க நாணயங்களை சிலர் தயாரித்து உபயோகிப்பதாக கேள்விப் பட்டோம். அவற்றை நாம் தொடக்கத்திலேயே தடுக்கவில்லை என்றால் சந்தையில் வீண் குழப்பங்கள் ஏற்படும். எனவே, இப்படி யாரிடமெல்லாம் முத்திரை இல்லாத தங்க நாணயங்கள், தங்கக் கட்டிகள் இருக்கின்றனவோ, அவற்றையெல்லாம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பொற்கொல்லர்களிடம் கொடுத்து விடும்படி நிர்வாகச் சபை ஒரு சட்டம் இயற்றி அறிவித்தால் நலமாக இருக்கும். அவற்றின் மதிப்பிற்குறிய முத்திரை உள்ள நாணயங்களையோ அல்லது நாணயச்சீட்டுகளையோ நாங்கள் அவர்களுக்குக் கொடுத்து விடுவோம்”. அய்யாவுவின் இந்த வேண்டுகோளும் தலைவர்களுக்கு நியாயமாகத் தெரிந்தது.

விரைவிலேயே நாணயச் சீட்டுகள் அச்சடிக்கும் பணி தொடங்கியது. $1, $2, $5, $10 போன்ற மதிப்புகளில் பெரும் எண்ணிக்கையில் அவை அச்சடிக்கப் பட்டன. முன்னரே ஒப்புக் கொண்டது போல அச்சிடும் செலவை பொற்கொல்லர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

சலவை செய்யப்பட்டவை போல ‘மொட மொட’ என்றிருந்த நாணயச் சீட்டுகள் மக்களுக்கு பிடித்துப் போய்விட்டன. சுருக்குப் பையிலோ இடுப்பு வாரிலோ மடித்து வைத்து கடைத்தெருவுக்கு எடுத்துச் செல்ல மிக வசதியாக இருந்தது.

******
“துண்டுச் சீட்டு, நாணயச் சீட்டு என்றெல்லாம் நான் இதுவரை சொல்லிக் கொண்டிருந்தது ‘கரன்சி’ நோட்டுகளைத்தான் என்பதை புரிந்துக் கொண்டிருப்பீர்கள்” என்றார் சேது.

“புரிந்தது” என்றார்கள் கதை கேட்டுக் கொண்டிருந்த நண்பர்கள்.

“இனி அதை ‘பண நோட்டு’ என்றே குறிப்பிடுவோம். அப்படியே நிர்வாகச் சபை என்பதை ‘அரசாங்கம்’ எனவும் மாற்றிக் கொள்வோம். ஓக்கேவா?”

“ஓக்கே!”

“அய்யாவு குழுவினர் பண நோட்டு வினியோகத்தில் பிஸியாக இருந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் கொஞ்சம் வரலாற்றைப் புரட்டிப் பார்த்து விட்டு வருவோம்.”

பல்லைக் கடித்துக் கொண்டு “தமிழ்லே எனக்கு புடிக்காத வார்த்தை ‘வரலாறு’. இருந்தாலும் பரவாயில்லை.. நீங்க மேலே சொல்லுங்க.” என்றார் நல்லையா.

தொடரும்

– சலாஹுத்தீன் பஷீர்

பணம் வந்த கதை – பகுதி: 10 -ரகசிய வித்தை


Share this News:

Leave a Reply