பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்…!

Share this News:

அனைவருக்கும் இனிய குடியரசு நாள் நல்வாழ்த்துகள்

பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்

மானந்தான் முதன்மையென்று மண்ணில் நாட்டி
….மகத்தான விடுதலையின் மாட்சி கண்டோம்

ஆனந்த சுதந்திரத்தை அடைந்து விட்டோம்
….அதற்கான விலைதந்தோம்; மறந்து நின்றோம்

வீணிந்த சுதந்திரமோ வினவக் கேட்போர்
….விடையாக ஆனபடி போகும் வாழ்வில்

ஏனிந்த இழிநிலைகள் எண்ணிப் பார்த்து
….எழுதிவிட்டேன் கவிதையிலே கேட்டுப் பாரீர்.

அடிமையராய் வாழ்ந்தபோதில் அடக்கு முறைகள்
….அன்றாடத் துயரோடு மிகுந்த இன்னல்

துடிதுடித்தோம் துயர்நீங்கிச் சிறக டிக்க
….தூய்மையான தன்னாட்சி துலங்கச் செய்ய

விடியலையே எண்ணித்தான் வேள்வி செய்தோம்
….ஒருநூறா ஆயிரமா உயிர்கள் நீத்தோம்

முடிவினிலே பூத்துவந்த சுதந்தி ரத்தை
….முறையாகப் பேணுவதில் குறைகள் வைத்தோம்.

சுவர்க்கத்தை சுகவெளியாய் சொல்வ தெல்லாம்
….சுதந்திரமே அங்கிருக்கும் கார ணந்தான்

எவர்க்குத்தான் இதிலிருக்கும் கருத்து பேதம்?
….ஏற்பதிலே விளங்குவது அடிமைத் தன்மை

உவக்கின்ற இனிப்புக்கும் உண்டு எல்லை
….உண்மையிலே சுதந்திரமும் அதனைப் போல

சுவர்க்கோழி கூவுவதா விடியல் ஆகும்?
…. செங்கதிரின் வெளிச்சந்தான் இருளைப் போக்கும்

கடப்பாடு கொண்டதுவே உலகின் விடியல்
….கடமையினை தவறிடிலோ காட்சி மாறும்

தடம்பார்த்து நடக்கத்தான் தூய பாதை
…தடம்புரள விரும்பிவிடின் வழியே வேண்டாம்

குடங்கொண்டு நீரள்ளும் வீதிச் சண்டை
….கொள்கின்ற படிமத்தில் மாநி லங்கள்.

படங்கொண்டே ஆடுகிற பாம்பைப் போல
…..பயங்கரத்தின் வாதங்கள் நச்சு கக்கும்.

செந்நிறத்து குருதிதன்னை நீராய் ஊற்றி
….செழிப்பான ஓர்பயிரை உழவு செய்தும்

எந்நிறைவு கொண்டோமோ எண்ணிப் பார்க்க
….எம்மாற்றம் இம்மாற்றம் ஏமாற் றம்தான்.

தன்னிறைவு கொள்ளாத மனங்கள் கொஞ்சம்
…..தவறெங்கே தடமெங்கே எண்ணிப் பார்க்கின்

கண்ணியத்தை பிறருக்குக் குறைவு செய்தல்
….கருத்தான சுதந்திரத்தில் கறையாய் ஆச்சே!

தவிக்கின்ற மனிதருக்குத் தண்ணீர் மறுத்து
….தரமறுத்தல் உரிமையென்று தான்மைக் கொண்டு

அவதிக்கும் அல்லலுக்கும் பிறரைக் காட்டி
….அணையற்ற விடுதலையைத் தமக்காய்த் தேக்கி..

தவத்தாலே கிடைத்ததோர் தங்கத் தீபம்
….தன்னுடைக்குள் ஒளித்துவைக்கத் தீயே பற்றும்.

புவனத்தில் ஒளிவீச பொதுவில் வைப்போம்
….பொறுப்பற்ற சுதந்திரமே பெரிய பாவம்.

என்மதமே என்னினமே என்பார் பாவம்
….தன்முதுகைத் தானறியா தவளை ஆவார்

கண்மறைக்கும் செருக்கெல்லாம் ஆதிக் கம்தான்
….கவிதையாகச் சொன்னாலோ குதிரை நோக்கு!

மண்மறைக்கும் வரையிலுமே மமதை எல்லாம்
….மணங்கமழும் வாழ்வென்றால் மதித்தல் பெற்றல்.

எண்ணமதில் நோயுற்ற ஆட்கள் மட்டும்
….எல்லாமே தாமென்பார்; ஏற்பார் யாரோ?!.

மதவெறியால் இனவெறியால் மூச்சு நீக்கி
….மடமையிலே உழலுதற்கா வெளிச்சம் கண்டோம்

எதுவரினும் இணைந்திருக்க வேண்டும் வேண்டும்
….எழுச்சியிலே நம்வாழ்வு மீளும் மீண்டும்

உதவுகிற மனதினையே உவகைத் தீண்டும்
….உண்மையதன் பொருளாகும் விடியல் கீதம்.

பதவிகளும் ஓர்வாய்ப்பே உதவி வாழ
….பிறவியிதன் நற்சிறப்பு இதுவே ஆகும்.

-இப்னு ஹம்துன் 


Share this News:

Leave a Reply