கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருந்ததற்கு தண்டனையா? – ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சென்னை (19 ஜூலை 2020): “கொரோனா காலத்தில் மக்கள் வீட்டில் இருப்பதற்கு மின் கட்டணத்தைப் பார்த்தால் மக்கள் ஷாக் ஆகும் அளவுக்கு அதிகமாக உள்ளது” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:

தமிழக அரசின் மின்கட்டணத்தை பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. மக்கள் எல்லாரும் வீட்டில் இருந்ததால் மின்சாரம் அதிகமாக செலவாகி இருக்கும் என்று சொல்கிறார்கள். ஊரடங்கில் மக்கள் வீட்டில் இருந்ததற்காக அரசு போடும் அபராதத் தொகையா இது? எடப்பாடி அரசு விதித்த மின்கட்டணம் நியாயமான கட்டணம் இல்லை. கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட அதிர்ச்சியை விட மின்கட்டண உயர்வால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும்போது ஊரடங்கை தளர்த்தினார்கள்; மதுக்கடையை திறந்தார்கள். 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவேன் என்று சொன்னார்கள். இவ்வளவையும் செய்தவர்கள் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்தார்களா?

பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் ரூ.5,000 நிவாரணம் வழங்க 3 மாதமாக சொல்கிறேன். எனது கோரிக்கையை முதல்வர் கேட்கவும் இல்லை; மக்களுக்கு நிவாரணமும் தரவில்லை. நிவாரணம் அறிவிக்காத முதல்வர், மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்வதில் மட்டும் மும்முரமாக இருக்கிறார்.

பேரழிவு காலத்தில்தான் மக்களுக்கு தங்களால் முடிந்த சலுகையை அரசாங்கம் வழங்க வேண்டும். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும்போது ஊரடங்கை தளர்த்தினார்கள். அரசின் அலட்சியத்தால் பிற மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. முரணான உத்தரவுகளை பிறப்பித்து மக்கள் பொறுப்பாக இல்லை என்று பழி சுமத்துகிறார்கள்.

கொரோனா ஒருபக்கம் வாட்டி வதைக்கிறது என்றால் முதல்வர் ஒருபக்கம் வாட்டி வதைக்கிறார். மத்திய தர வர்க்கத்தினர், ஏழை எளிய குடும்பங்கள் சிறு தொழில் செய்பவர்கள் யாருக்கும் வேலை இல்லை. கொரோனா ஊரடங்கால் தொழில் இல்லாமல் வருமானம் இன்றி ஏழை மக்கள் தவிக்கிறார்கள்.”

இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply