சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..?

புதுடெல்லி (09 ஜூலை 2020): ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பிற்கான 2020-2021 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தினை மூன்றில் ஒரு பகுதியாக குறைப்பதாக 7.7.2020 அன்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

கொரோனாவைரஸ் காரணமாக தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

ஜனநாயக உரிமைகள், உணவு பாதுகாப்பு, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற முக்கியமான பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கொவிட்-19 காரணம் காட்டி நீக்கப்பட்டுள்ளது.

பதினொன்றாம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி போன்றவை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில், சமகால உலகில் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளம், இந்தியாவின் புதிய சமூக இயக்கங்கள் போன்றவை நீக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மர் போன்ற அண்டை நாடுகளுடனான உறவு என்ற அத்தியாயமும் இந்திய வெளியுறவு கொள்கை என்ற பாடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்திலிருந்து ஜனநாயக உரிமைகள், இந்திய அரசலமைப்பின் கட்டுமானம் போன்றவை நீக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திலிருந்து இந்தியாவின் உணவு பாதுகாப்பு பாடம் நீக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜனநாயகமும் பன்முகத்தன்மையும், ஜாதி, மதம் மற்றும் பாலினம், ஜனநாயகத்திற்கான சவால்கள் போன்றவை நீக்கப்பட்டுள்ளன.

இச்செய்தியைப் பகிருங்கள்: