கருணாநிதிக்காக தமிழகம் வரும் குடியரசுத்தலைவர்!

சென்னை (02 ஆக 2021): இன்று தமிழகம் வரும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்தில் 5 முறை முதல்-அமைச்சராகவும், 80 ஆண்டுகள் பொது வாழ்க்கையில் இருந்தும், பல அழியாத முத்திரைகளை பதித்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைக்கிறார்.

தமிழக சட்டமன்றத்தில் என்றென்றும் மறக்க முடியாத அவரது உரைகள், நிறைவேற்றிய திட்டங்கள், எப்படி அரசுகளுக்கு வழிகாட்டியாக திகழ்கிறதோ, அதுபோல இனி சட்டமன்றத்தில் அவரது திருவுருவப்படம், அங்கு அமர்ந்திருக்கும், எதிர்காலத்தில் அமரப்போகும் உறுப்பினர்களுக்கு பாடமாக விளங்கும். தமிழக சட்டமன்றம், நூற்றாண்டு விழா காண்கிறது

இந்நிலையில் இன்று தமிழகம் வரும் குடியரசுத்தலைவர் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைப்பதோடு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

தமிழக சட்டசபைக்கு ஜனாதிபதி வந்து முன்னாள் முதல்-அமைச்சர்கள் படத்தை திறந்துவைப்பது இது 2-வது முறையாகும். 1977-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெருந்தலைவர் காமராஜர் படத்தை அப்போதைய ஜனாதிபதி என்.சஞ்சீவரெட்டி திறந்துவைத்தார். இப்போது கலைஞர் கருணாநிதி படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கிறார். தமிழக மக்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இந்த இருபெரும் தலைவர்களின் உருவப்படங்களை, நாட்டின் முதல் குடிமகன் திறந்துவைத்தது, இன்று திறந்துவைப்பது போற்றுதலுக்குரியது. அதேபோல கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கும்போது முதல்வராக அவரது மகனும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல்வராக இருப்பது சிறப்புக்குரியதாகும்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply