தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி வாழ்கிறோம் தெரியுமா? – டெல்லிக்கு பாடம் நடத்திய நவாஸ்கனி!

சென்னை (20 ஏப் 2022): டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பி நவாஸ்கனி தமிழகத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் எப்படி ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் முஸ்லிம்கள் தொடர்ந்து இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்படுகிறது, இஸ்லாமியர்களின் உடமைகள் தகர்க்கப்படுகிறது, பாதுகாப்பற்ற நிலையில் அங்குள்ள இஸ்லாமியர்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஜஹாங்கிர்புரி பகுதிக்குள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு இஸ்லாமிய ஏழை எளிய மக்களின் வீடுகளும், கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த நடவடிக்கையை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவுக்கு பிறகும் இரண்டு மணிநேரம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டன. வீடுகளை தான் இடித்து விட்டீர்கள் உடமைகளையாவது விட்டுவிடுங்கள் என அந்த மக்கள் கதறும் கதறல் இதயமற்ற சங்பரிவார் கூட்டங்களில் காதுகளுக்கு ஏனோ கேட்கவே இல்லை.

இத்தகைய அத்துமீறலும் நீதிமன்ற அவமதிப்பும் கடும் கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சிறிது நாட்களுக்கு முன்பு தமிழகத்திலும் சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

லட்சக்கணக்கான இந்து தொப்புள்கொடி உறவுகள் கலந்து கொண்டனர். எந்தவித கூச்சலும் இல்லை, கோசமும் இல்லை. ஏனென்றால் இங்கு சகோதரத்துவத்தோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்து வருகின்றோம். ஊர்வலம் என்ற பெயரில் அத்துமீறும் கலாச்சாரம் இல்லாத நல்லிணக்கம் மிகு பூமி தமிழகம்.

இதயமற்ற சங்பரிவார் கூட்டங்கள் தமிழக இந்து சகோதரர்களிடமிருந்து கற்றுக் கொள்ளட்டும் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும்.

இவ்வாறு நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply