புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்!

நாமக்கல் (30 அக் 2020): நாமக்கல்லில் கட்டப்படும் புதிய மருத்துவக் கல்லூரி இடிந்து கடும் சேதமடைந்துள்ளது.

நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 270 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதில் சத்தியமூர்த்தி அண்ட் கோ நிறுவனம் 150 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற்று பணிகளை மேற்கொண்டனர்.

45 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் தளம் கட்டும் பணி நடைபெற்ற வந்த நிலையில் நேற்று இரவிலும் பணிகள் நடைபெற்று வந்ததாக தெரிகிறது. இதில் நுழைவாயில் முகப்பு கான்கீரிட் தளம் அமைக்க பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிலிருந்த தூண் மற்றும் முன்பகுதி முழுவதுமாக இடிந்து சேதமடைந்துள்ளது.

அப்போது பணியிலிருந்த வட மாநில தொழிலாளர்கள் ஐந்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து நாமக்கல் மற்றும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் மற்றும் மாவட்ட காவ்சல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply