அவனுங்களை தூக்கில் போடுங்கள் – கதறும் ஜெயஸ்ரீயின் பெற்றோர் – வீடியோ!

விழுப்புரம் (12 மே 2020): விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியைச் சேர்ந்தவர் ஜெயபால் (42), ராஜி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர். விவசாயக் கூலி வேலை செய்துவரும் ஜெயபால் தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று ஜெயபாலும் அவரது மனைவியும் வெளியே சென்றிருந்த நிலையில், மூத்த மகளான ஜெயஸ்ரீ (15) மட்டும் வீட்டில் இருந்திருக்கிறார். சுமார் 11 மணியளவில் ஜெயபால் வீட்டிற்குள்ளிருந்து திடீரென்று புகைமூட்டம் வெளியேறியதுடன், அலறல் சத்தமும் கேட்டது.

அதனால் அக்கம்பக்கத்தினர் ஜெயபாலின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே உடல் முழுவதும் கருகிய நிலையில் சிறுமி ஜெயஸ்ரீ உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் 90% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி ஜெயஸ்ரீ, கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும்தான் தனது கைகளைக் கட்டிப்போட்டு பெட்ரோல் வைத்து எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துவிட்டு உயிரிழந்தார்.

இச்சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் பெற்றோர் யூடூப் சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் குற்றவாளிகள் வெளியே வந்தால் எங்கள் குடும்பத்தையே அழித்துவிடுவார்கள் எனவே அவர்களை தூக்கில் போட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி: கலாட்டா

இச்செய்தியைப் பகிருங்கள்: