சசிகலாவுக்கு எடப்பாடி ரகசிய தூது – ஓரங்கட்டப்படும் ஓபிஎஸ்!

சென்னை (06 அக் 2020): சசிகலாவின் விசுவாசமிக்க தொண்டரான எடப்பாடி சசிகலாவின் தலைமையில் அதிமுகவை இயக்க தயாராகி வருவதாகவும், அதற்காக ரகசிய தூதும் விடப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுகவைப் பொறுத்தவரை யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அதிமுகவிற்கு குடைச்சல் கொடுக்கும் மற்றொரு விஷயம் இருக்கிறது. அது சசிகலாவின் வருகை. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் விடுதலை ஆகிறார். ஆனால் அதற்கு முன்னதாகவே வெளியே வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. இவரது வருகை அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் கட்சிக்குள் மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில் முதல்வர் பழனிசாமி உட்பட பல்வேறு அமைச்சர்களும், நிர்வாகிகளும் சசிகலாவிற்கு விஸ்வாசமிக்க தொண்டர்களாக இருந்துள்ளனர். தற்போது வரை அப்படித்தான் இருக்கின்றனர். கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் தமிழக மக்கள் மத்தியில் தன்னை முன்னிறுத்திக் கொள்ள பழனிசாமி பயன்படுத்திய வார்த்தைகள் “நான் ஒரு விவசாயி, ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்தவன், சாதாரண தொண்டன்” உள்ளிட்டவை தான்.

ஆனால் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்துடன் நடந்த வார்த்தை மோதலில் இருவரையுமே சசிகலா தான் முதல்வராக ஆக்கினார் என்று பழனிசாமி வெளிப்படையாகக் கூறியுள்ளார். இந்த பேச்சு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்கள் சசிகலா குறித்து வாய் திறக்காமல் இருந்துவிட்டு தற்போது பேசியிருப்பது அந்த விஸ்வாசம் குறையவில்லை என்பதையே காட்டுகிறது. கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த போது, சசிகலா காலில் தவழ்ந்து வந்து வணங்கியவர் தான் பழனிசாமி என்பதை மறந்துவிடக் கூடாது.

இவரது விஸ்வாசத்தை போற்றும் வகையில் தான் முதல்வர் பதவியை வாரி வழங்கினார். சசிகலா சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த போது, பழனிசாமி நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே அவரை ஒட்டுமொத்தமாக ஈபிஎஸ் ஓரங்கட்டி விட்டார் என்று எண்ணலாம். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் எந்தவொரு சூழலிலும் சசிகலா குறித்து பழனிசாமி நேரடியான விமர்சனங்களை முன்வைத்ததில்லை என்பதில் இருந்து ஈபிஎஸ்சின் எண்ணங்களைப் புரிந்து கொள்ளலாம். தற்போது பழனிசாமியிடம் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிக செல்வாக்கு செலுத்தி வருகின்றனர்.

இவர்களது அறிவுறுத்தலின்பேரில் தான் அரசு தரப்பு அனைத்து முடிவுகளையும் எடுப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிமுகவில் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இதில் அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்ல பழனிசாமி முன்னால் இருக்கும் ஒரே வழி சசிகலாவுடன் கைகோர்த்து செல்வது மட்டுமே.

சசிகலாவின் விடுதலைக்கு பிறகு அதிமுகவில் முக்கியமான இரண்டு விஷயங்கள் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொண்டு கட்சியை அவரிடம் ஒப்படைப்பது. மற்றொன்று அதிமுகவில் மேலும் ஒரு பிரிவு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்வதாகும். ஏனெனில் ஓ.பன்னீர்செல்வம் புதிதாக தர்ம யுத்தம் ஒன்றைத் தொடங்கியது போல் முதல்வர் பழனிசாமி உடன் முரண்பட்டு நிற்கிறார். தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் வேட்பாளரை விடுங்கள்.

முதலில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை கட்டமைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் பழனிசாமி பிடிகொடுக்கவில்லை. இது கட்சிக்குள் விரிசலை ஏற்படுத்தி அதிமுக மீண்டும் இரண்டாக பிளவுபடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திவிடுமோ என்று அஞ்சப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கையாக சசிகலாவின் தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்து விடும். கட்சியின் பிடியும் இறுகிவிடும். சசிகலாவின் விஸ்வாசியாக மீண்டும் முதல்வராகி விடலாம் என்பது தான் பழனிசாமியின் கணக்காக இருக்க முடியும். எனவே பழம் நழுவி பாலில் விழுவதை யார் தான் சும்மா விடுவார்கள். எடப்பாடியின் விஸ்வாசத்தை சசிகலாவும் நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.

இதற்கிடையில் ஓபிஎஸ்சை ஓரங்கட்டுவதற்கு காய்களை நகர்த்தியதாக கூறப்படுகிறது. ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் இத்தகைய முடிவு எடுக்க வேண்டாம் என்று ஈபிஎஸ்சிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஜெயலலிதா முன்னிறுத்திய நபர் ஓபிஎஸ். அவரை ஓரங்கட்டினால் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் எழக்கூடும். எனவே அவரை அரவணைத்துச் செல்வதே சிறந்தது. சசிகலா வந்தால் ஆட்டம் தானாக அடங்கிவிடும் என்று கூறியுள்ளனர். அதிமுகவில் அடுத்து நிகழப் போகும் அரசியல் அதிரடியை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply