2020 ஐபிஎல் போட்டி நடக்கப் போவது எங்கே..?

IPL 2020

புதுடெல்லி (21 ஜூலை 2020): “ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்” என்று ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. இதனை அடுத்து இந்த தகவலை படேல் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.பி.எல். தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஐ.பி.எல். அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் பிரிஜேஷ் படேல், தெரிவித்தார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply