கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட அரசியல் நெருக்கடியே கரணம் – கம்யூனிஸ்ட் தலைவர் குற்றச்சாட்டு!

கொல்கத்தா (04 ஜன 2021): பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி கடும்நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.

பிசிசிஐ கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சனிக்கிழமை காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. தற்போது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிசிசிஐ யில் அமித் ஷா மகனும் இடம் பெற்றுள்ளார். அவருடன் சவுரவ் கங்குலியும் நிர்வாகப் பணிகளைச் செய்து வருகிறார், இதற்கிடையே வரும் மேற்கு வாங்க தேர்தலை முன்னிட்டு கங்குலி பாஜகவில் சேர வலியுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சவுரவ் கங்குலிக்கு நெருக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் அசோக் பட்டாச்சார்யா கங்குலியை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பட்டாச்சாரியா கூறும்போது, “கங்குலியை அரசியலில் சேரக் கூறி சிலர் அவருக்குக் கடும் மனஅழுத்தம் கொடுத்துள்ளார்கள். அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். இதனால் அவர் மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கலாம். கங்குலி அரசியலில் ஈடுபடுபவர் அல்ல. கங்குலியை விளையாட்டு வீரராகத்தான் அனைவராலும் அறியப்பட வேண்டும்.கங்குலியை அரசியலில் சேரக் கூறி அழுத்தம் கொடுக்கக் கூடாது. கடந்த வாரம் கூட நான் அவரிடம் அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது எனத் தெரிவித்தேன். அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்று கூறினார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *