துபை (21 ஜூலை 2020):கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அக்டோபர் மாதம் நடைபெறுவதாக இருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு கைவிடப்படுவதாகவும் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக், விம்பிள்டன் போன்ற கிரான்ட் ஸ்லாம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும் வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கும் வரும் என்பது தெரியாததால் எதிர்காலத்தில் விளையாட்டுப் போட்டிகளை எவ்வாறு நடத்துவது என்பது தெரியாமல் விளையாட்டு அமைப்புகள் குழம்பிப் போயுள்ளன.
இதனிடையே ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் ஐசிசி இருந்து வந்தது. இதனால் போட்டி நடைபெறுமா, இல்லையா எனும் குழப்பம் ரசிகர்களிடையே இருந்து வந்தது.
இறுதியாக இந்தக் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடபெறவிருந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் வருங்காலத்தில் நடைபெறவுள்ள போட்டித்தொடர்கள் குறித்த அட்டவணையையும் திருத்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2021 அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும். இதன் இறுதிப்போட்டி 14 நவம்பர் 2021 அன்று நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2022 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை நடைபெறும் இதில் இறுதிப்போட்டி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெறும்.
2023ம் ஆண்டில் 50 ஓவர்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் – நவம்பர் 2023-ல் இந்தியாவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் டி 20 உலகக் கோப்பைகள் நடைபெரும் தேதிகளை தள்ளி வைத்து அறிவித்தாலும் அப்போட்டிகள் எங்கு நடைபெறும் என்று ஐ.சி.சி குறிப்பிடவில்லை.
எனவே, இந்த அறிவிப்பும் பின்னர் மாறுதலுக்கு உள்ளாகுமா என்று ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
இளவேனில்