சவூதியில் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் பிளாஸ்மா தான விழிப்புணர்வு பிரச்சாரம்!

ஜித்தா (18 ஆக 2020): இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் சவூதி அரேபியாவில் நடத்திவரும் தேசிய பிளாஸ்மா(Plasma) தானம் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக சவூதி அரேபியா மேற்குமாகாணம் ஜித்தாவில் 74 வது இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் ஜித்தா மாநகரில் பிளாஸ்மா தான பிரச்சாரத்தை தொடங்கியது.

இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம், ஜித்தா மாநகரில் பிளாஸ்மா தான பிரச்சாரத்தை 15.8.2020 சனிக்கிழமை காலை முதல் தொடங்கியது. இதனை இந்திய துணைத்தூதரக செயல் துணைத்தூதர் ஒய்.எஸ். சாபிர் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக துவக்கிவைத்தார்.

இந்நிகழ்ச்சி IFF ஜித்தா மாகாண தலைவர் ஃபயாசுதீன் தலைமையில் இந்திய துணைத்தூதரக வளாகத்தில் நடைபெற்றது. முன்னதாக செயல் துணைத்தூதர் நிகழ்ச்சியினை துவக்கிவைத்து உரையாற்றும் போது, கோவிட் 19 நோயினை கட்டுப்படுத்துவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் சவுதி அரேபிய அரசு சிறந்த தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறந்த திட்டங்களை அமுல்படுத்தி, மனிதாபிமானத்தின் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கிவருகின்றது. இந்தியர்களாகிய நாம் இந்நாட்டிற்கு திருப்பித் தரக்கூடிய மிகச் சிறந்த பரிசு பிளாஸ்மா தானம். IFF ஏற்பாடு செய்துள்ள இந்த பிளாஸ்மா தான பிரச்சாரத்தை சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது துவக்கி வைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் தெரிவித்தார்.

சவுதி சொசைட்டி ஆஃப் டிரான்ஸ்ஃபியூஷன் மெடிசின் தலைவர் மற்றும் பல்கலைக்கழக மருத்துவமனை இரத்த வங்கியின் உதவி இயக்குநர் டாக்டர் சல்வா ஹிந்தாவி அவர்கள் பிளாஸ்மா தானத்தின் அவசியத்தை கூறி சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மருத்துவமனையில் IFF தன்னார்வ தொண்டர்கள் நடத்தி வரும் இரத்த தான முகாம்களை பாராட்டியும், பிளாஸ்மாவை தானம் வழங்குவதற்கான யோசனையை ஒரு தன்னார்வ அமைப்பு கொண்டு வருவது இதுவே முதல் முறை என்றும் இரத்தமாற்று மைய ஆலோசகர் டாக்டர். நிஹால் யாகூப் அவர்கள் சிறப்பித்து கூறினார்.

இந்நிகழ்ச்சியில் IPWF தலைவர் அய்யூப் ஹக்கீம், IFF சவுதி அரேபிய செயலாளர் சம்சுதீன் மலப்புரம், IPWF ஆலோசகர் முகமது அப்துல் அஜீஸ் கித்வாய், இரத்த வங்கி மேற்பார்வையாளர் எட்வின் ராஜ் மற்றும் ISF ஜித்தா மாகாண செயலாளர் அலி கோயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியினை IFF ஜித்தா மாகாண செயலாளர் இக்பால் செம்பன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக கோவிட் 19 நோய்தொற்று ஏற்பட்டு குணமடைந்த IFF தன்னார்வலர்கள், மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைகழக மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் வழங்கினர். மருத்துவமனையினரின் வேண்டுகோளுக்கிணங்க தினமும் குறிப்பிட்ட நபர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்குறிய ஏற்பாடுகளை IFF பிளாஸ்மா தான ஒருங்கிணைப்பாளர்கள் செய்துவருகின்றனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply