இறந்த தாயை எழுப்பும் குழந்தை – வைரலான குழந்தைக்கு உதவும் ஷாரூக்கான் அறக்கட்டளை!

Share this News:

மும்பை (01 ஜூன் 2020): பீகார் முசாபர்பூர் ரயில்வே சேஷனில் இறந்த தாயை எழுப்ப முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில் அந்த குழந்தைக்கு உதவ நடிகர் ஷாருக்கானின் ‘மீர் அறக்கட்டளை’ முன்வந்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊர்களுக்கு செல்வதில் மிகவும் அவதிபட்டனர். பலர் கால்நடையாக நடந்தே ஊருக்கு சென்றனர். இதில் பலர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.

அந்த வகையில் தாமதமாக அரசு அறிவித்த ரெயில்களிலும் பலர் பயணித்தனர். கடந்த வாரம் ஒரு பெண் தனது குழந்தையுடன் ரெயிலில் பயணித்தார். அந்த ரெயில் பீகார் முசாபர்பூர் வரும் வழியில் ரெயிலிலேயே அந்த பெண் உயிரிழந்தார். அந்த பெண்ணின் உடல் முசாபர்பூர் ரெயில்வே நிலையத்தில் கிடத்தப்பட்டிருந்தது. ஆனால் தாய் இறந்தது கூட தெரியாமல் இறந்த பெண்ணின் குழந்தை தாயை எழுப்பும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.

அந்த வீடியோ, நாட்டில் ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட புலம்பெயர்ந்தோரின் பாரிய நெருக்கடியை உணர்த்தும் வகையில் வெளிவந்த மிகவும் இதயத்தை பிழியும் வீடியோவாகும்.

இந்நிலையில் அந்த குழந்தைக்கு உதவ ஷாருக்கானின் ‘மீர் அறக்கட்டளை’ முன்வந்துள்ளது. அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் பணியில் மீர் அறக்கட்டளை சிலரது உதவியை நாடியது. அதன்படி அந்த குழந்தையை கண்டுபிடித்து தற்போது உதவி வருகிறது.

இதுகுறித்து மீர் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த குழந்தையை அடைய எங்களுக்கு உதவிய அனைவருக்கும் மீர்ஃபவுண்டேஷன் நன்றி செலுத்துகிறது, அவரது தாயை எழுப்ப முயற்சிக்கும் இதயம் வெடிக்கும் வீடியோ அனைவரையும் அதிரச் செய்தது. நாங்கள் இப்போது அவருக்கு ஆதரவளித்து வருகிறோம், அவர் தனது தாத்தாவின் பராமரிப்பில் இருக்கிறார் ”என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஷாரூக்கான் தெரிவிக்கையில், “ஒருவர் பெற்றோரை இழந்து தவிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று, அதுவும் ஒன்றும் அறியாத குழந்தை என்றால் அது மிகவும் கொடுமை, தாய் கொடுத்த அன்பை நாங்களும் கொடுக்க முயல்கிறோம். அந்த குழந்தையை கண்டுபிடித்து தர உதவிய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.


Share this News: