இந்திய எல்லையில் மீண்டும் படைகளை குவிக்கும் சீனா!

லடாக் (29 ஜூன் 2020): கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் மீண்டும் சீனா படைகளை குவிப்பது செயற்கைகோள் படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் ஆற்று பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய படைகளுக்கும் சீன படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 35 முதல் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி, இருதரப்பும் ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. அதில், இருநாட்டு ராணுவமும் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது ராணுவத்தை மீ்ண்டும் குவித்து வரும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளபுதிய செயற்கைக்கோள் புகைப்படத்தில், இந்த பள்ளத்தாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு எல்லை கோடுக்கு அருகே சீன படைகள் குவிக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கு பல்வேறு இடங்களில் மிகப்பெரிய அளவில் 20 ராணுவ கூடாரங்களை அது அமைத்துள்ள காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த கூடாரங்கள் கருப்பு நிற தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. இவற்றில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சீனாவின் இந்த படைகள் குவிப்பு செயலால், எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகமாகி வருகிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்: