ராமநவமி கலவரம் – 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறை கொடூர தாக்குதல் – வீடியோ!

கார்கோன் (12 ஏப் 2022): மத்திய பிரதேசம் கார்கோனில் 70 வயது முஸ்லிம் மூதாட்டி மீது காவல்துறையினர் கொடூர தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

வட மாநிலங்களில் ராமநவமி ஊர்வலத்தால் ஏற்பட்ட வன்முறை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் கலவரத்தால் பாதிக்கப்பட்ட நகரமான கார்கோனில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட பிறகும், காவல்துறை அதிகாரிகள் ஏப்ரல் 11 அதிகாலை பிலால் மசூதியின் கதவுகளை உடைத்து நுழைந்து அங்கிருந்தவர்களிடம் பயத்தின் சூழலை உருவாக்கியுள்ளனர்.

மசூதியின் எதிரில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த காவல்துறையினர், 70 வயதான மூதாட்டியை கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும் அந்த பெண்மணி “மகனே நிறுத்துங்கள்” என கதறியும் காவல்துறையினர் கேட்கவில்லை.

காவல்துறையினரின் தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி கூறுகையில், “வீட்டில் ஆண்கள் யாரும் அப்போது இல்லை. காவல்துறையினர் பெட்டியை உடைத்து, பணத்தை கொள்ளையடித்ததோடு, என்னையும் அடித்தனர். அதுமட்டுமல்லாமல் வீட்டில் இருந்த மற்ற பெண்களையும் கடுமையாக தாக்கி அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் எடுத்துக் கொண்டனர்” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் மத்திய பிரதேசம் கார்கோனில் ராம நவமி ஊர்வலத்தின் போது முஸ்லிம்களுக்கு எதிரான ஆத்திரமூட்டும் பாடல்கள் இசைக்கப்பட்டன. இதனை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. காவல்துறை அறிக்கையின்படி, 30 வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இரவு 9 மணியளவில் விசயம் சற்று தணிந்த போதிலும், நள்ளிரவு 12 மணியளவில் மீண்டும் வன்முறை வெடித்தது. அப்போது காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பதிலடி கொடுத்தனர். இதனை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடந்ததை அடுத்து, ஏப்ரல் 11 அன்று கலவரம் மற்றும் கல் எறிதல் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் உத்தரவின் பேரில், மோகன் டாக்கீஸ் பகுதியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகளை இடிக்க பாஜக தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்தது.

வன்முறை தொடர்பாக இதுவரை 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply